சென்னை: சுமார் 1.5 கிமீ உயரம் வரை வடக்கு உள் கர்நாடகாவிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு, சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், ஈரோடு, சேலம், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
