பெ.நா.பாளையம்: கோவை அருகே வீடு புகுந்து 3 கோழிகளை சிறுத்தை வேட்டையாடிய சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள கணுவாய், தடாகம், சின்ன தடாகம், சோமையனூர், சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், மாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை சோமையனூரில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.
பின்னர் அங்கிருந்த ஈஸ்வரன்(46) என்பவரது வீட்டுக்குள் நுழைந்து அவர் வளர்த்து வந்து 3 கோழிகளை சிறுத்தை வேட்டையாடி வாயில்கவ்விக் கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது. இந்நிலையில் ஈஸ்வரன் நேற்று காலை எழுந்து பார்த்த போது 3 கோழிகள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து அவர் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது, சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்து கோழிகளை வேட்டையாடி வாயில் கவ்விக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதையறிந்த சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் தங்களது உறக்கத்தை தொலைத்து விட்டு அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கோழிகளை சிறுத்தை வேட்டையாடி வாயில் கவ்விச் சென்ற சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நீலகிரியில் வீட்டுக்குள் பிடிபட்ட சிறுத்தை
நீலகிரி மாவட்டம் மசினகுடி வன சரகம் மாயார் அருகே செல்வப்பா காலனியில் நேற்று இரவு 9.30 மணியளவில் நாயை விரட்டி வந்த சிறுத்தை சிவக்குமார் என்பவர் வீட்டிற்குள் புகுந்தது. இதையறிந்த சிவக்குமார் மெதுவாக வீட்டில் இருந்து வெளியேறி கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டார். இத்தகவலறிந்து சம்பவயிடம் வந்த மசினகுடி வனத்துறையினர் ஜன்னல் வழியாக பார்த்த போது சிறுத்தை வீட்டில் இருந்த கட்டில் அருகே பதுங்கி இருந்ததை உறுதி செய்தனர்.
இதை கேள்விப்பட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் மயக்க மருந்து செலுத்தி சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனத்துக்குள் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர், கூண்டு கொண்டு வரப்பட்டு வீட்டுக்குள் இருந்து சிறுத்தை வெளியேறாத வகையில் கதவு அருகே வைக்கப்பட்டது. கதவை லேசாக திறந்து வைத்துவிட்டு வனத்துறையினர் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியேறிய சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது. பிறகு கூண்டை வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்று சீகூர் வனத்தில் சிறுத்தையை பத்திரமாக விடுவித்தனர்.
