மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் வனத்துறை சோதனைச்சாவடி அருகே தாயை பிரிந்த சுமார் 3 வயது குட்டி யானை ஒன்று கடந்த மாதம் 25ம் தேதி வனத்துறையினரால் மீட்கப்பட்டது. குட்டியானையை அதன் தாய் மற்றும் கூட்டத்துடன் சேர்க்க முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து குட்டி யானை உடல் நலனை கருத்தில் கொண்டு சிறுமுகை பெத்திக்குட்டை மோதூர் வனப்பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட வனவிலங்கு மீட்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பராமரிக்கப்பட்டது. அங்கு வன கால்நடை மருத்துவர்கள் மேற்பார்வையில் ஆனைமலை புலிகள் காப்பகம் கோழிகமுத்தி முகாமில் இருந்து வந்த பாகன் உதவியுடன் நடை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவின்படி, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநரும், கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலருமான வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு வழிகாட்டுதலின் பேரில் சிறுமுகை மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானை கூடுதல் பராமரிப்பு மற்றும் மறு வாழ்விற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு மாற்ற திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை கால்நடை மருத்துவர்கள், வனச்சரகர்கள் ராஜகுருவு, மனோஜ் ஆகியோர் முன்னிலையில் குட்டி யானை உடல்நல பரிசோதனைக்கு பின்னர் வாகனத்தில் ஏற்றினர்.
முன்னதாக வாகனத்தில் ஏற்ற முயன்ற போது ஏற மறுத்து குட்டி யானை அடம்பிடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வன ஊழியர்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் குட்டி யானையை வெயிலை சமாளிக்கும் வகையில் உரிய பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்த வனத்துறை வாகனத்தில் ஏற்றினர். இதை தொடர்ந்து குட்டியானை ஆனைமலை கோழிகமுத்தி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முகாமில் கால்நடை மருத்துவர்கள், வனத்துறை அதிகாரிகள், பாகன்கள் உதவியுடன் குட்டி யானை பராமரிக்கப்பட உள்ளது.
