சென்னிமலை பேரூராட்சி பகுதியில் காவிரி குடிநீர் திட்டத்தில் முறைகேடாக 3 இடங்களில் துளையிட்டு பைப்லைன்

*பொதுமக்கள் அதிர்ச்சி – கவுன்சிலர்கள் எதிர்ப்பு

சென்னிமலை : சென்னிமலை பேரூராட்சி பகுதிக்கு வரும் காவிரி குடிநீர் பைப் லைனில் முறைகேடாக 3 இடங்களில் துளையிட்டு பைப் லைன் அமைக்கப்பட்டதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னிமலை பேரூராட்சியில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது.

இதனால், கடந்த திமுக ஆட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ் ரூ.15 கோடி நிதி பெற்று பவானி அருகே கோணவாய்க்கால் என்ற இடத்தில் செல்லும் காவிரி ஆற்றில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் புதிய நீர் சேகரிப்பு கிணறு அமைப்பதுடன், பெருந்துறை முதல் சென்னிமலை வரை ஏற்கனவே பல ஆண்டுக்கு முன்பு பதிக்கப்பட்ட பழைய சிமெண்ட் பைப் லைன்களை அகற்றிவிட்டு புதிய வார்ப்பு இரும்பு பைப் லைன் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த 13-11-2025 அன்று அப்போதைய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய இரும்பு பைப் லைன் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். தற்போது இந்த பணிகள் பெருந்துறையில் இருந்து சென்னிமலை அருகே ஈங்கூர் வரை நிறைவு பெற்றுள்ளது.

இந்த நிலையில், சென்னிமலைக்கு வரும் புதிய இரும்பு குடிநீர் பைப் லைனில் இருந்து துளைகளிட்டு ஈங்கூர் அருகே எல்லைமேடு, பவர் ஹவுஸ் மற்றும் ஈங்கூர் ரயில் நிலையம் ஆகிய இடங்களுக்கு புதிதாக 3 குடிநீர் பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு பேரூராட்சி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், இவர்கள் புதிதாக பைப் லைன் அமைக்கப்பட்ட 3 இடங்களையும் கள ஆய்வு செய்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் இருந்து மாலை வரை சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி துணைத்தலைவர் சவுந்தர்ராஜன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மகேந்திரன் ஆகியோருடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் நந்தினி, இளநிலை பொறியாளர் தாரணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், சென்னிமலை பேரூராட்சிக்கு வரும் பைப் லைனில் இருந்து புதிதாக அமைக்கப்பட்ட 3 பைப் லைன்களையும் எங்களால் அகற்ற முடியாது என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். அதேசமயம் இந்த பிரச்னை குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறுகையில்,“சென்னிமலை பேரூராட்சி பகுதிக்காக மட்டும் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பைப் லைனில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முறைகேடாக துளையிட்டு 3 இடங்களுக்கு பைப்லைன் அமைத்துள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நடந்த பேச்சுவார்த்தையில் அந்த 3 பைப் லைன்களையும் அகற்ற முடியாது என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இதனை அதிகாரிகள் அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.

Related Stories: