*மனு கொடுக்க பெண்கள் திரண்டனர்
தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளில், ரூ.15.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 கேட்டு மனு கொடுக்க பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி அலுவலரும், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளருமான தர்மராஜ் தலைமையில், ஜமாபந்தி கடந்த 12ம் தேதி துவங்கியது.
நிறைவு நாளான நேற்று, உனிசேநத்தம், உலிமாரனப்பள்ளி, கோட்டமடுகு, கொமாரனப்பள்ளி, கெம்பட்டி, பேளகொண்டப்பள்ளி, கலுகொண்டப்பள்ளி, சாரகப்பள்ளி, சாத்தனூர், பெரியமதகொண்டப்பள்ளி, மாகொண்டப்பள்ளி, பையநாகன அள்ளி, தொகரை அக்ரகாஹாரம், கொடியாளம், தேவகானப்பள்ளி உள்வட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.
முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.1.35 லட்சத்தில் 6 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள், 10 பேருக்கு உட்பிரிவு பட்டா மாறுதல், ரூ.14.40 லட்சத்தில் 30 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா என மொத்தம் ரூ.15.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதனிடையே, சிலர் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 பெறுவதற்கான மனுக்கள் கொடுப்பதாக தகவல் பரவியதால், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த பெண்கள் கூட்டம், கூட்டமாக வந்து உதவித்தொகை மனுக்களை எழுதி கொடுத்தனர். இதனால் தாலுகா அலுவலகத்தில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் மாலை வரை அதிகாரியிடம் மனுக்களை வழங்கினர்.
இந்த முகாமில் தேன்கனிக்கோட்டை தாசில்தார் வேலு, துணை தாசில்தார்கள் சக்திவேல், சுபாராணி, செல்வராஜ், வட்ட வழங்கல் அலுவலர் தீபா, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், தாலுகா அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
