ஈரோடு மாருதி நகரில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்

*வரி செலுத்தியும் இணைப்பு வழங்கவில்லை என குற்றச்சாட்டு

ஈரோடு : ஈரோடு மாருதி நகரில் பாதாள சாக்கடை கால்வாய் இல்லாததால் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், குடிநீர் தொட்டியில் கலந்து வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாநகராட்சி 10வது வார்டு மாருதி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள், பாதாள சாக்கடை திட்டத்திற்காக இணைப்புகளுக்கு விண்ணப்பித்தும், அதற்கான வரி செலுத்தியும், இதுவரை அத்திட்டம் செயல்படுத்தவில்லை.

இந்நிலையில், குடியிருப்புகளில் இருந்து அன்றாடம் வெளியாகும் கழிவுநீர் நிலத்தடியில் இறங்கி, குடியிருப்புகளில் நிலத்தடியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் உள்ள நீரில் கலந்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அஸ்வத் கூறுகையில், “மாருதி நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு பாதாள சாக்கடை திட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதனால் குடியிருப்புகளில் இருந்து அன்றாடம் வெளியேற்றப்படும் கழிவுநீர், நிலத்தடியில் ஊறுகிறது.

பின்னர், குடியிருப்புகளில் நிலத்தடியில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் இறங்கி, குடிநீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், குடிப்பதற்கும், சமைப்பதற்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, இப்பிரச்சினைக்கு தீர்வு காண பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: