தென்காசி: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் பேரூராட்சிகள் இயக்குநரகம் செயல்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 487 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாததால், பணியாளர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான மின்சாரம், குடிநீர் வசதி, சுகாதாரம், சான்றழிப்பு உள்ளிட்ட பல்வேறு அத்யாவசிய பணிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்வதிலும் இழுபறி ஏற்பட்டது.
இதனால் தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் நிர்வாகம் முடங்கியது. அடிப்படை பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் பேரூராட்சி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பணியாளர்களுக்கு எவ்வளவு நாட்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பது குறித்த விபரத்தை கேட்டறிந்து ஒரு மாத சம்பளம், குடிநீர் கட்டணம், மின்கட்டணம் ஆகியவற்றுக்கான நிதியை விடுவித்துள்ளனர். அதாவது மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு பேரூராட்சிக்கும் ரூ.10 லட்சம் முதல் 25 லட்சம் வரை ஒரு மாத நிதி மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
