பெண்கள் மட்டுமே சாதிக்க முடியாது சகோதரர்களும் நம்முடன் இருக்க வேண்டும்: பெண் மருத்துவர்கள் மாநாட்டில் தமிழிசை பேச்சு

சென்னை எல்லா இடத்திலும் பெண்கள் மட்டுமே சாதிக்க முடியாது, சகோதரர்களும் நம்முடன் இருக்க வேண்டும் என்று பெண் மருத்துவர்கள் மாநாட்டில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார். அன்னையர் தினத்தையொட்டி சென்னை, பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் பெண் மருத்துவர்களுக்காக மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், திமுக எம்பி கனிமொழி என்விஎன் சோமு ஆகியோர் பங்கேற்றனர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, நான் இன்று இந்த மேடையில் நிற்க என் அம்மாவுக்கு கடமை பட்டுள்ளேன். நான் என் அப்பா பேச்சைக் கேட்டிருந்தால் இங்கு இருந்திருக்க மாட்டேன். எனது வாழ்க்கையே வேறு மாறி இருந்திருக்கும். மருத்துவராக மட்டுமல்ல, எனது இயக்கமே வேறாக இருந்திருக்கும். அரசியலுக்கு வந்த பின்பும் நான் என் மருத்துவத் தொழிலை தொடர்ந்தேன்.

முழுமையாக அரசியல் பணி செய்ய வேண்டிய காரணத்தினால்தான் அதை விட்டேன். நான் படித்த படிப்புதான் எனக்கு உதவுகிறது. யூஸ் அன்ட் துரோவாக அம்மாக்களை வைக்காதீர்கள். முழுமையான வாழ்க்கையை அவர்கள் நமக்கு கொடுக்கிறார்கள். நாம் அதை செய்வதில்லை. அம்மாவை சொத்தாக நினைப்பது குறைந்து கொண்டு வருகிறது. தாய், தந்தை முழுமையாக நம்மை வளர்க்கிறார்கள். வயதான பின்னர் முழுமையாக அவர்களுடன் நாம் இருக்க வேண்டும். பெண்கள் சக்தி மிக்கவர்கள் என்பதால்தான் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே அஞ்சுகிறார்கள். எல்லா இடத்திலும் பெண்கள் மட்டுமே சாதித்துவிட முடியாது. சகோதரர்கள் உடன் இருக்க வேண்டும். பெண்களுக்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

The post பெண்கள் மட்டுமே சாதிக்க முடியாது சகோதரர்களும் நம்முடன் இருக்க வேண்டும்: பெண் மருத்துவர்கள் மாநாட்டில் தமிழிசை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: