சிவகாசி மாநகராட்சியில் புதுப்பொலிவு பெறும் தென்றல் நகர் பூங்கா: பொதுமக்கள் வரவேற்பு

சிவகாசி: சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் அருகே தென்றல் நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் பராமரிப்பு பணிகள் படுஜோராக நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகாசி மாநகராட்சியில் கந்தபுரம் காலனி, ஆயில்மில் காலனி, ரத்தினம் நகர், ஸ்டேண்டர்டு காலனி உட்பட பல்வேறு இடங்களில் 84 பூங்கா உள்ளது. இதில் பெரும்பாலான பூங்காக்கள் பயன்பாடின்றி காணப்பட்டது. தற்போது அனைத்து பூங்காவையும் அடையாளம் கண்டு சீரமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு சிவகாசி மாநகராட்சி ஜே. நகரில் ரூ.65 லட்சம் மதிப்பிலும், புதுக்காலனியில் ரூ.40 லட்சம் மதிப்பிலும், காரனேசன் காலனியில் ரூ.55 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்காக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் தங்கம்தென்னரசு திறந்து வைத்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகாசி மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ரத்தினம் நகர் சிறுவர் பூங்கா சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் அருகே தென்றல் நகரில் சிறுவர் பூங்காவை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதனை தொடர்ந்து தென்றல் நகர் பூங்கா சீரமைக்கும் பணிகள் படுஜோராக நடைபெற்று வருகின்றன. இதில் குழந்தைகள் விளையாடும் வகையில் சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பூங்காக்களில் பழுதடைந்த சுற்றுச்சுவர்களை சீரமைப்பது, மின் விளக்குகள் அமைப்பது, பசுமையை ஏற்படுத்துவது, பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட பாதை, சிறுவர்கள் விளையாடி மகிழ ஊஞ்சல், முதியவர்கள் ஓய்வாக அமர இருக்கைகள் என அழகுற பூங்கா சீரமைக்கப்பட்டு வருகின்றது. மாநகராட்சியின் இந்த முயற்சி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

The post சிவகாசி மாநகராட்சியில் புதுப்பொலிவு பெறும் தென்றல் நகர் பூங்கா: பொதுமக்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: