×

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 644 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

*சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கினார்

ஊட்டி : ஊட்டியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 644 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சென்னையில் நடந்த விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

இவ்விழாவில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தார். ஊட்டி கோட்டாட்சியர் மகராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவினா தேவி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊட்டி நகராட்சி தலைவர் ரவிக்குமார் மற்றும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து விழாவில் 644 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்காக திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் சென்று சேர வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகின்றார். குறிப்பாக, கல்வி மற்றும் மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மேலும், மகளிர் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் இதுவரை 1.15 கோடிக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ.1000ம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மகளிர் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்தின் கீழ் இதுவரை 445 கோடி மகளிர் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 8 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் அனைத்து கிராமப்புற பஸ்களிலும் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். தமிழக அரசின் காலை உணவுத்திட்டம் மூலம் தமிழகத்தில் 14 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் மூலம் தற்போது அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா காலத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் வீடு தேடி சென்று கல்வி வழங்கப்பட்டுள்ளது. ரூ.13 ேகாடியே 12 லட்சம் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இதுவரை ரூ.6 ஆயிரத்து 654 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு 9 சதவீதமாக உள்ளது. ஜிடிபியில் தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது. மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

தொழில் முனைவோர் வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்திலும், கல்வி வளர்ச்சியில் 2வது இடத்திலும் உள்ளது. புத்தாக்க திட்டத்தில் முதலிடம் வகிக்கிறது. சுற்றுலா வளர்ச்சியில், வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மக்களுடன் முதல்வர் திட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 341 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 6 ஆயிரத்து 41 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள், வாகனங்கள், தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

The post மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 644 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Tourism Minister ,Ooty ,Ramachandran ,Nilgiri district ,Chief Minister ,Dinakaran ,
× RELATED ரூ.10.95 லட்சத்தில் சேமிப்பு கிடங்கு திறப்பு