×

18% ஜிஎஸ்டி பன் செய்வது எப்படி? வைரலாகும் வீடியோ

கோவையில் தொழில் அமைப்பினருடன் கடந்த 11ம் தேதி நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து பேசுகையில், ‘இனிப்புக்கு 5 சதவீத ஜிஎஸ்டி, காரத்துக்கு 12 சதவீத ஜிஎஸ்டி எனவும், பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால் அந்த பன்னுக்குள் கிரீமை வைத்தால் 18 சதவீத ஜிஎஸ்டி, இதனால் கம்ப்யூட்டரே பில் போட முடியாமல் திணறுகிறது’ என்றார். இவரது பேச்சு சமூக வலைதளத்தில் வைரலானது. அன்று முதல் ஜிஎஸ்டி குறித்து பதிவிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதில், 18 சதவீத ஜிஎஸ்டி பன் செய்வது எப்படி? என தற்போது ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘இப்ப நம்ம ஜிஎஸ்டி பன் எப்படி செய்வது என பார்க்க போகிறோம். பஸ்ட் ஒரு கிரீமை எடுத்துக்கோங்க, அதை நல்லா கலக்கிங்கங்க, கலக்கி முடிச்சதுக்கப்பறம் அந்த கிரீமை எடுத்து ஜிஎஸ்டி இல்லாத பன்னை எடுத்து அதை இரண்டா கட் செய்து, அதுக்குள்ள கிரீமை தடவுனீங்கனா 18 சதவீத ஜிஎஸ்டி பன் ரெடி ஆகிடும்’ என பதிவிட்டுள்ளனர். இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்களை அளித்து, பாஜ அரசையும், நிர்மலா சீதாராமனையும் கலாய்த்து வருகின்றனர்.

* நேஷனல் லெவல் டிரெண்டிங்: அன்னபூர்ணாவில் குவிந்தது கூட்டம்; கோவைக்காரனுங்க குசும்புகாரங்கப்பா…
ஜிஎஸ்டி பிரச்னை தொடர்பாக கோவையில் தொழில் அமைப்பினருடன் நடந்த கலந்துரையால் நிகழ்ச்சியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் கவுரவ தலைவரும், அன்னபூர்ணா ஓட்டல்களின் உரிமையாளருமான சீனிவாசன் ‘‘ஸ்வீட்டுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதம், காரத்துக்கு 12 சதவீதம், பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால் பன்னுக்குள்ள கிரீமை வச்சுட்டா அதுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி. இதனால் பில் போடறது பிரச்னையா இருக்கு. கம்ப்யூட்டரே திணறுது’’ என்று தெரிவித்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, சீனிவாசன் தனியாக நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசனை சந்தித்து மன்னிப்பு கேட்டதை வீடியோ எடுத்து பாஜவினர் வெளியிட்டனர். கோவையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது அன்னபூர்ணா ஓட்டல். கோவைக்கு செல்லும் விவிஐபிக்கள் எல்லாம் அந்த ஓட்டலுக்கு சென்று இனிப்பு, கார வகைகளை மற்றும் உணவை ரசித்து ருசித்து சாப்பிடுவது வழக்கம். இப்படி புகழ்பெற்ற ஓட்டலின் நிறுவனரை கூப்பிட்டு வைத்து மன்னிப்பு கேட்க வைத்து அதை வீடியோ எடுத்து வெளியிட்டு அவமானப்படுத்தி விட்டார்களே என கோவை மக்கள் கொதித்தெழுந்தனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

குறைகளை சரி செய்யாமல் குறை கேட்கும் கூட்டம் நடத்தி மிரட்டுவது சரியல்ல. கோவை அமைதியான நகரம். நிம்மதியாக தொழில் செய்பவர்களை இப்படி எல்லாம் மிரட்டுவாங்களா? என பலரும் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே ஜிஎஸ்டியால் கோவை மாவட்டம் மட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் தொழில்கள் தள்ளாடி வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய நிதி அமைச்சர் கூட்டம் நடத்தி நல்லது செய்வார் என எதிர்பார்த்தால் அதை எல்லாம் விட்டு, இப்படி அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதாக தொழில் துறையினர் கொந்தளிக்கின்றனர். அகில இந்திய அளவில் தொழில் துறையினர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகவும், அன்னபூர்ணா சீனிவாசனுக்கு ஆதரவாகவும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

டிவிட்டர், இன்ஸ்டா, பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் ஒன்றிய அமைச்சரின் செயல்பாடுகளை கேலி கிண்டல் செய்த பதிவுகள் பரவலாகி வருகிறது. கருத்து கேட்டு சரி செய்ய வழிவகை செய்யப்படும் என சொல்லியிருந்தால் இந்த விவகாரம் சாதாரணமாக போயிருக்கும். மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிட்டதால் பிரச்னை விஸ்வரூபமெடுத்து விட்டதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொழில் துறைக்காக குரல் கொடுத்த சீனிவாசனுக்கு தொழில், வணிக, வியாபார அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அன்னபூர்ணா ஓட்டல் விவகாரம் நேஷனல் லெவல்ட் டிரெண்டிங் ஆனதால், அன்னபூர்ணா ஓட்டலுக்கு இதுவரை போகாதவர்கள் கூட அங்கு குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த 2 நாட்களாக எப்போதும் விட கூட்டம் அலைமோதுகிறது. இதனால் காலை உணவு வகைகள் சில மணி நேரங்களில் விற்று தீர்ந்தது. உணவு, ஸ்வீட், காரம் வாங்க குவிந்த கூட்டத்தை விட வெறும் பன், கிரீம் பன் சாப்பிட குவிந்த கூட்டம்தான் அதிகம். கோவைக்காரனுங்க குசும்புகாரங்கப்பா… என்று சொல்வாங்க. அதற்கேற்றார் போல் ஜிஎஸ்டி இல்லாத பன் கொடுங்க, ஜிஎஸ்டி பன் கொடுங்க என்று கேட்டு வாங்கி சமூக வலைதளத்தில் பதிவிட்டு டிரெண்டு செய்து வருகின்றனர். கிரீம் சேர்த்தால் 18% ஜிஎஸ்டி, வெறும் பன்னுக்கு 5% ஜிஎஸ்டி என்று சீனிவாசன் குறிப்பிட்டு பேசியிருந்தார். இதனால் ஜிஎஸ்டி பன், ஜிஎஸ்டி இல்லாத பன் என்று சமூகவலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் கிரீம் பன், சாதாரண பன் வகைகள் விற்பனை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அதிகரித்துள்ளது. கடைக்கு வந்த சில மணி நேரத்தில் பன் தீர்ந்து விடுவதாக கூறப்படுகிறது.

* ‘வரி வசூலிப்பதில் புரோக்கரை விட ஒன்றிய அரசு மோசம்’ குஜராத்திக்காரன் பேசினால் சிரிப்பு தமிழன் பேசினால் மன்னிப்பா? நிர்மலா சீதாராமன் மீது நெட்டிசன்கள் சாடல்
மும்பையில் கடந்த மே 14ம் தேதி நடைபெற்ற தொழில் துறையினருடனான கலந்துரையாடல் கூட்டத்தில் ​​ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பலரும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்து பேசினர். அப்போது, குஜராத்தை சேர்ந்த ஒரு தொழில் அமைப்பு நிர்வாகி, நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து முன் வைக்கும் கேள்விகள் தற்போது வைரலாகி வருகிறது. அவர் அந்த வீடியோவில் ஜிஎஸ்டியை முன் வைத்து ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசுகையில், ‘‘நாங்கள் வர்த்தகம் செய்யும்போது, ​​நீங்கள் ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, முத்திரை வரி, எஸ்டிடி மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரிகளை ஈர்க்கிறீர்கள். அதனால் இன்று ஒன்றிய அரசு புரோக்கரை விட அதிகமாக சம்பாதிக்கிறது. நான் முதலீடு செய்கிறேன், நிறைய ரிஸ்க் எடுக்கிறேன், என் லாபம் அனைத்தையும் அரசாங்கம் பறிக்கிறது. எனவே நீங்கள் (ஒன்றிய அரசு) ஸ்லீப்பிங் பார்ட்னராக உள்ளீர்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டார்.

இதற்கு நிர்மலா சீதாராமன், “உறங்கும் பங்குதாரரால் இங்கே உட்கார்ந்து பதில் சொல்ல முடியாது” என்று சிரித்தபடி நகைச்சுவையாக பதிலளித்தார். தற்போது இந்த வீடியோவையும், கோவை கொடிசியா வளாகத்தில் அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து பேசிய வீடியோவையும் சமூக வலைதளத்தில் சிலர் பதிவிட்டுள்ளனர். அதில், ‘‘பாஜவின் தமிழர் விரோத மன நிலை’’ என்று குறிப்பிட்டு, குஜராத்தி கேள்வி கேட்டால் சிரிக்கிறார், தமிழன் கேள்வி கேட்டால் மன்னிப்பு கேட்க சொல்கிறார் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

* பாஜ மன்னிப்பு கேட்டுவிட்டது இந்த எபிசோடை முடித்து கொள்ளலாம்: அன்னபூர்ணா அறிக்கை
அன்னபூர்ணா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வங்கி, நிதி மற்றும் ஜிஎஸ்டி ஆகிய துறைகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து விவாதிக்க கோவையில் கடந்த 11ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு ஒட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரும், தென்னந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்க துணை தலைவரும், அன்னபூர்ணா நிர்வாக இயக்குநருமான சீனிவாசன், உணவகங்களிலும், பேக்கரிகளிலும் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி மாறுபாடு குறித்து பிரச்னைகளை பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் பேசியது தவறாக எதுவும் புரிந்து கொள்ளப்படக் கூடாது என தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே நிதியமைச்சரை சந்தித்து பேசினார்.

தனிப்பட்ட முறையில் சந்தித்த வீடியோவை பகிரப்பட்டது தவறான புரிதலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. பாஜவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், வீடியோ பொது வெளியில் பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டனர். வீடியோ வெளியிட்டவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வர்த்தக அமைப்புகள் மற்றும் அமைப்புகள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்காக ஜிஎஸ்டி கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக நிதி அமைச்சருக்கும், எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் தேவையற்ற அனுமானங்கள் மற்றும் அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். இந்த எபிசோடை முடித்துவிட்டு,பணி தொடர விரும்புவதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்’’ என கூறி உள்ளது.

The post 18% ஜிஎஸ்டி பன் செய்வது எப்படி? வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Annapurna Hotel ,Srinivasan ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Dinakaran ,
× RELATED ஓட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டபோது நான் இல்லை என்னை பலிகடா ஆக்கிவிட்டனர்