×

சிறையில் ஆடை கூட வழங்காமல் மீனவர்களுக்கு மொட்டையடித்து இலங்கை அரசு அட்டூழியம்: கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: சிறையில் ஆடைகூட வழங்காமல் மீனவர்களுக்கு மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த ஆக.26ம் தேதி கடலுக்கு சென்ற தங்கச்சிமடத்தை சேர்ந்த மரியசியாவுக்கு சொந்தமான ஒரு விசைப்படகையும், 8 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்களில் கிங்சன்(38), ராஜ்(48), இன்னாசி ராஜா(47), அந்தோணியார் அடிமை(64), முனியராஜ்(23) ஆகிய 5 பேர், ரூ.50 ஆயிரம் அபராதத்துடன் தலைமன்னார் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேர், 2வது முறையாக பிடிபட்டதால் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து மீனவர்கள் மெக்கான்ஸ்(34), சசிக்குமார்(45), மாரியப்பன்(54) ஆகிய 3 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்தியதை தொடர்ந்து, விடுதலையான மீனவர்கள் கிங்சன்(38), ராஜ்(48), இன்னாசி ராஜா(47), அந்தோணியார் அடிமை(64), முனியராஜ்(23) ஆகிய 5 பேரும் நேற்று முன்தினம் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்திற்கு மதியம் அழைத்து வந்தனர். இதில் செப்.5ம் தேதி கட்டவேண்டிய அபராத தொகையை செப்.9ம் தேதி தாமதமாக கட்டியதால், இலங்கை சிறையில் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் ஒட்டு மொத்த ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மீனவர் கிங்சன் கூறுகையில், ‘‘வயிற்று பிழைப்புக்காக மீன் பிடிக்க சென்ற எங்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்தது. இலங்கை நீதிமன்றத்தில் அபராத தொகையை கட்ட தாமதமானதால் செப்.6ம் தேதி காலையில் வவுனியா சிறைக்குள் வைத்து, ‘இந்திய நாய்களா’ என்று, எங்களை கூப்பிட்டு எட்டு பேருக்கும் சிறையில் வைத்து மொட்டை அடித்து அவமானப்படுத்தினர். கொச்சை வார்த்தைகளால் பேசி ஆடைகள் வழங்காமல் டவுசருடன் எங்களை இருக்க வைத்து சாக்கடை அள்ளும் வேலை செய்ய சொல்லி சித்ரவதைப்படுத்தினர்’’ என்றார்.

இலங்கை அரசின் இந்த மனித உரிமை மீறல் செயல்களை கண்டித்தும், தமிழக மீனவர்கள் பிரச்னையில் கண்டும்காணாமல் உள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், விடுதலையாகி தாயகம் திரும்பிய மீனவர்கள் தலைமையில் நேற்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மீனவகளின் குடும்பத்தினர், சங்க பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதில் ஒன்றிய அரசை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

* விஷ பூச்சி அறையில் அடைத்து சித்ரவதை
மீனவர் இன்னாசி ராஜா கூறுகையில், ‘‘இலங்கை கடற்படை கடலில் எங்களை மிரட்டியே கைது செய்தது. கைவிலங்கு போட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற சிங்கள போலீஸ், எங்களை நாயை விட கேவலமாக நடத்தினர். கெட்டுப்போன சாப்பாடு கொடுத்து கொடுமைப்படுத்தினர். இரவில் விஷ பூச்சிகள் உள்ள அறையில் அடைத்து தூங்கக்கூட விடாமல் துன்பப்படுத்தினர். இதனால் நாங்கள் பெரும் துயரத்தை அனுபவித்தோம்’’ என்றார்.

The post சிறையில் ஆடை கூட வழங்காமல் மீனவர்களுக்கு மொட்டையடித்து இலங்கை அரசு அட்டூழியம்: கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan government ,Rameswaram ,Mariasia ,Thangachimadam ,
× RELATED தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டை...