×

நிர்மலா சீதாராமனை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்: 2 பெண்கள் சேர்ந்து கோவை மக்களை சிதைத்து விட்டதாக செல்வப்பெருந்தகை காட்டம்

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து, கோவை காந்திபார்க் ரவுண்டானா பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று பேசுகையில், ‘இரு பெண்கள் சேர்ந்து, கோவை மக்களை ஒரே நாளில் சிதைத்து விட்டார்கள். கோவையின் அடையாளமாக விளங்கும் இங்குள்ள மிகப்பெரிய உணவக உரிமையாளரை மன்னிப்பு கேட்கவைத்து, அவமானப்படுத்தி, வீடியோ வெளியிட்டுள்ளனர். இதன்மூலம், கோவை மக்களின் நம்பிக்கையை சிதைத்து விட்டார்கள். இது, கோவை மக்களுக்கு மிகப்பெரிய அவமானம். பாஜவின் இந்த பாசிச ஆட்சியை, தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, எதிர்கட்சிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, சாமானிய மக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற குறைந்தபட்ச நாகரிகம்கூட இல்லாமல், இப்படி எல்லோரையும் வருந்த செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அற்ப விளம்பரத்துக்காக வீடியோ வெளியிட்டு, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விரோதத்தை சம்பாதித்துக்கொண்டார். அவர், தமிழக மக்களிடம், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை பேசினார்.

* ஜிஎஸ்டி இல்லாத பன்தான் பயப்படாம சாப்பிடுங்க…
ஆர்ப்பாட்டத்தில், செல்வப்பெருந்தகை, பன் மாலை அணிந்து பங்கேற்றார். அவரது தலைமையில் ஒன்றிய அரசையும், நிர்மலா சீதாராமனையும் கண்டித்து தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றதும் அனைவருக்கும் பன் வழங்கினார். அப்போது செல்வப்பெருந்தகை இது, கிரீம் இல்லாத பன்… ஜி.எஸ்.டி கிடையாது… தைரியமாக சாப்பிடுங்கள் என உற்சாகமூட்டினார்.

* தமிழக வியாபாரிகளை அவமானப்படுத்திய பாஜ: நடிகர் கருணாஸ்
மதுரை கோச்சடையில் நடிகர் கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:நாட்டின் குடிமகனாக ஜிஎஸ்டியை நியாயமாக ஏற்கிறேன். நான் சம்பாதிப்பதில் 18 சதவீதம் கொடுக்கிறேன். இதனை நாட்டு மக்களுக்காக செலவிடவில்லை. இந்த ஜிஎஸ்டியை அம்பானிக்கும், அதானிக்கும் கொடுக்கிறார்கள். அவர்களை வளர்க்க ஏன் நான் வழங்க வேண்டும்? தனியார் ஓட்டல் உரிமையாளர் உண்மையை பேசியதற்காக, மன்னிப்பு கேட்க வைப்பது சர்வாதிகார போக்கு. இது தமிழக வியாபாரிகளுக்கு அவமானம். பாஜ என்பது ஏமாற்றுக்கூட்டம். அரசியலில் வருவது எளிதல்ல. விஜய் கொள்கை சித்தாந்தம் குறித்து சொன்னால் பின்னர் பார்ப்போம். இப்போதைய நிலையில் விஜய் கூட தனித்து நிற்க முடியாது.

நான் தனித்து நின்றால் நானும் எனது மனைவியும் தவிர யாரும் ஓட்டு போடமாட்டார்கள். களத்தில் யதார்த்தம் இது தான். மதுவுக்கு எதிராக பாமக போராட்டம் நடத்தி வந்துள்ளது. ஆனால் மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஜாதி கட்சியையும், மத கட்சியையும் ஒதுக்கி வைத்துவிட்டு மாநாட்டை திருமாவளவன் நடத்துகிறார். மது ஒழிப்பு மாநாட்டிற்கு பாமகவையும் அழைத்து இருக்க வேண்டும். திருமாவளவன் உள்நோக்கத்துடன் மாநாட்டை நடத்துகிறார். அப்படி பார்த்தால் விசிக ஜாதி கட்சி இல்லையா? இதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் எந்த அமைப்பாக செயல்பட்டு வந்தது. மதுவுக்கு எதிராக எல்லோரையும் வரவழைத்து தமிழனாக மது ஒழிப்பு மாநாட்டை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* வீடியோ வெளியான விவகாரம் கோவை பாஜ மண்டல தலைவர் அதிரடி நீக்கம்
கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. சீனிவாசன் பின்னால் நின்றிருந்த சில பாஜ நிர்வாகிகள் அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து பாஜ ஐடி விங் மூலம் பரப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வீடியோவை வெளியிட்டதற்காக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில், கோவை மாநகர் மாவட்ட பாஜ தலைவர் ரமேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொது செயலாளர் முருகானந்தம் மற்றும் மாநில பொருளாளர் சேகர் ஆகியோர் ஒப்புதலுடன் கோவை சிங்காநல்லூர் மண்டல தலைவராக இருந்த சதீஷ், கட்சியின் ஒற்றுமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், கட்சியின் விரோத செயல்களில் ஈடுபட்டதாலும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நிர்மலா சீதாராமன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கணும்: மாஜி முதல்வர்
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: பிரதமர் மோடி ஆட்சியில் சிறு தொழில், குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரி மிகப்பெரிய சுமையாக உள்ளது. 75% தொழிலாளர்கள் நடுத்தர தொழிலில்தான் பணியாற்றி வருகின்றனர். அந்த வாய்ப்புகளை அளிக்கும் தொழிலதிபர் ஒருவர் கோயம்புத்தூரில் நிதியமைச்சரிடம் கேள்வி கேட்டுள்ளார். பல்வேறு வரிகள் இருப்பதால் அவற்றை மாற்றி, மக்களுக்கு சிரமம் இல்லாமல் வரியை போடுமாறு அவர் கேட்டுக் கொண்டார். இதில் எந்த தவறும் இல்லை. இதற்கு நிதியமைச்சர் பதில் சொல்லியிருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் விரோதியாக பிரதமர் நினைக்கிறார்.

அதேபோல்தான் நிர்மலா சீதாராமனும் உள்ளார். அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் கேட்டது நியாயமான கேள்வி. சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒரே வரிதான். இந்த திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்தோம். ஆனால் மோடி அரசு அதை மாற்றி விட்டது. அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால் அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை வற்புறுத்தி மன்னிப்பு கேட்கச் செய்துள்ளது. சுதந்திரமாக ஒருவர் கருத்தை சொல்ல முடியாத நிலையை பாஜ உருவாக்கி உள்ளது. நடந்த சம்பவத்திற்கு நிர்மலா சீதாராமன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். எம்எல்ஏ வானதி சீனிவாசனும் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நிர்மலா சீதாராமனை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்: 2 பெண்கள் சேர்ந்து கோவை மக்களை சிதைத்து விட்டதாக செல்வப்பெருந்தகை காட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Nirmala Sitharaman ,Selvaperunthakai Kattam ,Coimbatore ,Coimbatore North District Congress ,Coimbatore Gandhi Park Roundabout ,Union Finance Minister ,president ,Congress party ,Selvaperunthakai ,
× RELATED மிரட்டி பணம் பறித்த வழக்கு நிர்மலா...