×

சுற்றுலா வேன்-கார் பயங்கர மோதல் தந்தை, மகள்கள் உட்பட 4 பேர் பலி: மலேசிய தமிழர்கள் 8 பேர், டிரைவர் படுகாயம்

தேவகோட்டை: தேவகோட்டை அருகே மலேசிய சுற்றுலாப்பயணிகள் வந்த வேன், கார் நேருக்கு நேர் மோதியதில் காரில் இருந்த தந்தை, 2 மகள்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். வேனில் வந்தவர்களில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
மலேசியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் 12 பேர் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். நேற்று சுற்றுலா வேனில் ராமேஸ்வரம் சென்று விட்டு திருச்சியை நோக்கி திரும்பினர். மதுரை ஆனையூரைச் சேர்ந்த கந்தையா(40) வேனை ஓட்டினார். திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பகல் 1 மணி அளவில் தேவகோட்டை மாரிச்சான்பட்டி மேம்பாலத்தில் வேன் வந்தது. அப்போது, எதிரே தஞ்சாவூரில் இருந்து ஆண்டாஊரணியை நோக்கி கார் சென்றது. பாலத்தின் இறக்கத்தில் வேனும், காரும் நேருக்கு நேர் மோதியது.

இதில் காரை ஓட்டி வந்த தஞ்சாவூர் காந்திநகரைச் சேர்ந்த பவுல்டேனியல் (38), அவரது மகள்கள் சூசன்ரெகுமா (10), ஹெலன்சாமா (7) மற்றும் பவுல்டேனியலின் சித்தப்பா மைக்கேல் (63) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். வேனில் இருந்த டிரைவர் கந்தையா (40), செல்லத்துரை (26), ரேணுகா (51), சந்திரன் (55), போகஷாசினி (21), குணசுந்தரி (51) உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து தேவகோட்டை தாலுகா போலீசாரும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்குழுவினரும் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களை காரில் இருந்து வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்கு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post சுற்றுலா வேன்-கார் பயங்கர மோதல் தந்தை, மகள்கள் உட்பட 4 பேர் பலி: மலேசிய தமிழர்கள் 8 பேர், டிரைவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Malaysia… ,Patukayam ,
× RELATED அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு