நாடு எங்கே போய் நிற்கும் என தெரியவில்லை; இந்திய நாடு அவர்கள் அப்பன் வீட்டு சொத்தா?.. அமைச்சர் துரைமுருகன் காட்டம்

சென்னை: இந்திய நாடு என்ன அவர்கள் அப்பன் வீட்டு சொத்தா என அமைச்சர் துரைமுருகன் காட்டமாக விமர்ச்சித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வர ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக சட்டமசோதா நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தியா, தனது நாட்டின் பெயரை ‘இந்தியா’ என்பதை ‘பாரத்’ என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என அச்சிடப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், உலகளவில் ‘இந்தியா’ என்பது ‘பாரத்’ என மாற்றப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. இந்நிலையயில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன்; நாடு எங்கேயோ போகிறது, எங்கே போய் நிற்கும் என்று தெரியவில்லை. குறுகிய மனப்பான்மை உடையவர்களிடம் ஆட்சி கிடைத்துவிட்டதால் நாடு படாதபாடு படுகிறது. ஒருவேளை சட்டமன்றத்தை கலைத்துவிட்டு அமெரிக்க அதிபர் போல் மோடி வர விரும்புகிறாரோ?. இந்திய நாடு என்ன அவர்கள் அப்பன் வீட்டு சொத்தா? சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றினோம்.

ஏனென்றால், இந்து தமிழ் பேசும் தேசம், கலாச்சாரம் என பல்வேறு வரலாறுகள் இங்கு உள்ளது. ஆனால், பாரத்துக்கு என்ன உள்ளது. எனவே, குறுகிய மனப்பான்மை உடையவர்களிடம் ஆட்சி கிடைத்துவிட்டதால் நாடு படாதப்பாடுபடுகிறது என்றார். மேலும், இந்த மண்ணில் பிறந்தவர்களை எப்படி சிறும்பான்மையினர் என்று சொல்வது? கேள்வி எழுப்பிய அமைச்சர், சிறுபான்மையினருக்கு எப்போது ஆபத்து வந்தாலும் திமுக உடனே வந்து நிற்கும் எனவும் தெரிவித்தார்.

The post நாடு எங்கே போய் நிற்கும் என தெரியவில்லை; இந்திய நாடு அவர்கள் அப்பன் வீட்டு சொத்தா?.. அமைச்சர் துரைமுருகன் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: