சமீபத்தில், உலக கை கழுவும் தினம் அனுசரிக்கப்பட்டது. என்ன கை கழுவுவதற்கு தினமா… இதற்கெல்லாம் கூட ஒரு தினம் இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறதா. ஆனால் ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதே கைகள் சுத்தமாக இருப்பதுதான். அது எவ்வளவு உண்மையானது என்பதை கொரோனா வந்த போது நமக்கு நிரூபித்தும்விட்டது. இதனால்தான், கொரோனா தொற்றுக்கு சானிடைசரை காட்டிலும் சிறந்தது கைகளை சோப்பு போட்டு கழுவுவதுதான் என்பதை பலமுறை வலியுறுத்தினார்கள் சுகாதாரத்துறை நிபுணர்கள். அந்தவகையில், கை கழுவுதலின் முக்கியத்துவம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்.
உலக கைகழுவும் தினம் தொடக்கம் மக்கள் இயல்பாக நோய்கள் குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் 2008-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 15 -ஆம் தேதியை உலக கை கழுவும் தினமாக அறிவித்தது. அதன்படி இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 -ஆம் தேதியன்று பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், பொதுத்தொண்டு நிறுவனங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதை கடைபிடித்தும் வருகிறது.
இந்த தினம் கொண்டாட்டத்திற்கானது என்பதை விட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைகளை சுத்தமாக வைத்திருப்பதற்கான நடைமுறைகளை எடுத்துரைப்பதற்கான நாளாகவும் உருவாக்கப்பட்டது என்பதே சரியாக இருக்கும்.இந்த ஆண்டு சுத்தமான கைகள் எட்டும் தூரத்தில் உள்ளன என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கை கழுவும் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. சமீப காலமாக கைகளை கழுவுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், அதனால் கிடைத்த நன்மைகள் குறித்தும் இது விளக்குவதோடு, கைகளை சுத்தமாக வைத்திருக்க ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தையும் இது வலியுறுத்துகிறது.
கைகளை ஏன் கழுவ வேண்டும் நாம் நமது அன்றாட வாழ்வில் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். பல்வேறு பொருட்களை தொடுகிறோம். அவற்றில் ஏராளமான கிருமிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவேதான் நோய்க் கிருமிகள் பரவுவதில் கைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. இந்த கிருமிகள் தரையின் மேற்பரப்புகள், காற்று மற்றும் கைகளில் இருக்கின்றன. பொதுவாக காற்றில் பரவும் தொற்றுகள், இருமலினாலும் தும்மலினாலும் ஏற்படுகிறது. கைகளினால் பரவும் தொற்றுகள், நாம் நம் முகங்களையோ அல்லது பிற பொருட்களையோ தொடும்போது, நம்மை அறியாமலே இந்த கிருமிகள் நம்மிடையே பரவுகின்றன. ஏனென்றால், கண்ணுக்குத் தெரியாத இந்த பல்வேறு நோய்க்கிருமிகள் கைகளில்தான் இருக்கின்றன.
கைகளைச் சுத்தம் செய்யாமல் நாம் சாப்பிடும்போது இந்த கிருமிகள் வயிற்றுக்குள் சென்று வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், ஜலதோஷம் போன்ற நோய்களை உண்டாக்கி விடுகின்றன. இதனால் நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தொடர்ந்து கைகளை நாம் கழுவும்போது, நம் கைகளில் உள்ள கிருமிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைவதோடு, நோய் அபாயமும் குறைய வாய்ப்புள்ளது. அதுவே, உரிய முறையில் கைகளைச் சுத்தம் செய்யவில்லை என்றால், காலரா, டைஃபாய்டு, வாந்தி, பேதி போன்றவை வருவதற்கு வாய்ப்பு உண்டு.
கைகளை சுத்தமாக கழுவுவது எப்படிகை கழுவுவது சிறிய விஷயம்தான். ஆனால் இதை முறையாக செய்யும் போது உடலில் நோய்த்தொற்றுகள் தவிர்க்கப்படுகிறது. தண்ணீரில் கைகளை கழுவினாலே சுத்தம் செய்தது என்று நினைக்க வேண்டாம். அதற்காக கை கழுவிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.கைகளை வெறும் நீரில் கழுவாமல் சோப்பு அல்லது சோப்பு நீர் போட்டு தேய்த்து கழுவுவதுதான் முறையான கைகழுவுதல் ஆகும். இப்படி செய்வதன் மூலம் தொற்று நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
சோப்பு போட்டு கைகளை உடனே கழுவாமல் 20 நொடிகளாவது கைவிரல்கள் நக இடுக்குகள் விரல் இடுக்குகளைக் கழுவுவதன் மூலம் 80 சதவீதமான தொற்று நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். எப்போதெல்லாம் கைகளைக் கழுவ வேண்டும்குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பும், வெளியில் விளையாடிவிட்டு வந்த பிறகும், கழிப்பறைகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இந்தப் பழக்கத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே வீட்டு பெரியவர்கள் கற்றுத் தர வேண்டும். பெண்கள் சமையல் செய்யும் போது கைகளை முறையாக சோப்பு போட்டு கழுவிய பிறகுதான் சமைக்க வேண்டும். சமைக்கும் போது மட்டுமல்ல உணவுப் பொருட்களைப் பயன்படுத்தும்போதும் காய்களை நறுக்கும் போதும் என ஒவ்வொரு முறையும் கைகளை நன்றாக கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும்.
வெளியில் சென்று வரும்போது சோப்பு போட்டு தேய்த்து கண்டிப்பாக கைகளை 30 விநாடிகள் தொடர்ந்து கழுவ வேண்டும். அதுவரை கைகளை முகத்தில் தடவுவதோ வாயருகில் கொண்டு செல்வதோ கண்களை துடைப்பதோ கண்டிப்பாக செய்யக்கூடாது. இதை அனைவருமே கடைபிடிக்க வேண்டும்.வளர்ப்பு பிராணிகள் இன்று பெரும்பாலோரது இல்லங்களில் குடும்பத்தில் ஒருவராக பாவித்து வளர்க்கப்படுகிறது. நமது ஆரோக்கியத்தை நலமாக வைக்க வேண்டுமெனில் வளர்ப்பு பிராணிகளையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். குழந்தைகள் இவற்றைக் கட்டிப்பிடித்து (நாய், முயல், பூனை, கிளி…) விளையாடிய கையோடு சாப்பிடத் தொடங்குவார்கள். வளர்ப்பு பிராணிகள் இருக்கும் வீடுகளில் கைசுத்தத்துக்கு கூடுதல் பராமரிப்பு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
கழிவறைக்கு சென்று வந்த பின் அல்லது டயாப்பர் மாற்றிய பிறகு கைகளை நன்றாக கழுவ வேண்டும். இது தனிப்பட்ட சுகாதாரத்தில் மிக முக்கியமான ஒன்றாகும்.இருமல், சளி அல்லது தும்மல் ஏற்படும்போது, அதற்குப் பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் கிருமிகள் பரவுவதை தடுக்க முடியும்.நோய்வாய்ப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொண்ட பிறகு, உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க கைகளை கழுவ வேண்டும்.
குப்பைப் பைகளை கொண்டு சென்று போட்ட பிறகு கைகளை நன்றாக கழுவ வேண்டும்.வெட்டுக் காயங்கள் மற்றும் புண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன் மற்றும் பின் கைகளை கழுவ வேண்டும்.கைகழுவுதல் என்பது நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கான நேரடியான ஆனால் மிகவும் சக்திவாய்ந்த ஒரு வழிமுறையாகும். கைகளை கழுவுவதை ஒரு வழக்கமான நடைமுறையாக்கி, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உலகிற்கு நாம் கூட்டாக பங்களிக்க வேண்டும்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
The post கை கழுவுங்கள்… ஆரோக்கியமாக இருங்கள்! appeared first on Dinakaran.