வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தருவோம் என்ற மம்தா பானர்ஜி பேச்சுக்கு வங்கதேசம் கடும் எதிர்ப்பு

கொல்கத்தா: வங்கதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதற்கு வங்கதேச அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகத்திலும் அதிருப்தியை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததுதான் தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசிய கிழக்கு பாகிஸ்தான் மக்கள், மீது பாகிஸ்தான் ராணுவம் இன ஒடுக்குமுறையை ஏவியது. இதில் பல்லாயிரக்கணக்கான வங்கதேச மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து அங்கு வங்கதேச விடுதலை போர் வெடித்தது. இந்தியாவின் உதவியுடன் 1971ம் ஆண்டு வங்கதேசம் தனி சுதந்திர நாடாக உருவெடுத்தது.

வங்கதேச விடுதலை போரில் பங்கேற்ற வீரர்களின் குடும்பங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு அந்நாட்டில் வழங்கப்பட்டு வந்தது. இது சில ஆண்டுகளுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டது. நீதிமன்ற தலையீட்டினால் மீண்டும் இந்த இடஒதுக்கீடு கிடைக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், மீண்டும் இந்த இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். வன்முறையாளர்களை கண்டதும் சுட வங்க தேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையால் இந்தியர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘வங்கதேச வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கு வங்க மாநில அரசு அடைக்கலம் தர தயாராக உள்ளது.

நான் வங்கதேச நாட்டின் பிரச்சனை குறித்து பேசவில்லை. அதை பேசுவதற்கு ஒன்றிய அரசு இருக்கிறது. ஆனால் வங்கதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மேற்கு வங்கத்தின் கதவுகளை தட்டும் போது அடைக்கலம் கொடுப்போம். உதவி கேட்டு வரும் அகதிகளுக்கு உரிய மரியாதை தருவதை ஐநா உறுதி செய்திருக்கிறது’ என்றார். இதற்கு வங்கதேச அரசு எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், ‘வங்கதேச உள்விவகாரங்களில் தலையிடும் வகையில் மம்தாவின் பேச்சு அமைந்திருப்பதாகவும் மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பை பயன்படுத்தி பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் பலனடைய பார்ப்பார்கள் எனவும் இந்திய துணை தூதகரத்திடம் வங்க தேச அரசு எழுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

The post வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தருவோம் என்ற மம்தா பானர்ஜி பேச்சுக்கு வங்கதேசம் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: