விழுப்புரம் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள் விளையாட்டரங்கில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும்

*மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள் விளையாட்டு அரங்கில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டார்.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் செயல்பட்டு வருகிறது.

இவ்விளையாட்டு அரங்கத்தில் இறகுபந்து விளையாடுவதற்கான களம் அமைக்கப்பட்டுள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட நபர்கள் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் இறகுபந்து விளையாடி வருகின்றனர். அதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கில் அடிப்படை வசதிகள் தொடர்பாக திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது உள் விளையாட்டு அரங்கில் மின்விளக்கு வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் சாதனங்கள் நல்ல நிலையில் உள்ளதா மற்றும் உள் விளையாட்டரங்கம் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இறகுபந்து தரைத்தளத்தில் வார்னிஷ் அடித்திடவும் இறகுபந்து விளையாட்டுக்கு என்று தனியாக ஒரு பயிற்சியாளர் நியமித்திடவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் உள் விளையாட்டு அரங்கில் இறகுபந்து விளையாடி வருபவர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தபோது அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளது என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் நீச்சல் குளத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு குளத்தில் உள்ள நீர் சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்தும், நீச்சல் பயிற்சி பெற்று வருபவர்கள் விவரம் குறித்தும் கேட்டறிந்ததுடன் அவ்வப்போது குளத்தில் உள்ள நீரை குளோரினேஷன் செய்து தூய்மைப்படுத்திட வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பான முறையில் நீச்சல் பயிற்சி மேற்கொள்வதை நீச்சல் பயிற்றுனர் உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post விழுப்புரம் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள் விளையாட்டரங்கில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: