விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல் : அதிமுக , தேமுதிக போட்டியில்லை!

சென்னை: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக அன்னியூர் சிவாவை (விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர்) முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அமைச்சர் பொன்முடி, எம்.பி.க்கள் ரவிக்குமார், ஜெகத்ரட்சகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24ம் தேதி நடைபெறும்.மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பா.ஜனதா கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது.அ.தி.மு.க., தே.மு.தி.க. போட்டியிடாததால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.

The post விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல் : அதிமுக , தேமுதிக போட்டியில்லை! appeared first on Dinakaran.

Related Stories: