வெண்ணாம்பட்டியில் ₹36.15 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கருத்துரு

*கலெக்டர் நேரில் ஆய்வு

தர்மபுரி : தர்மபுரி வெண்ணாம்பட்டியில் ரூ.36.15 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாலம் அமைக்கும் இடத்தை கலெக்டர் சாந்தி நேற்று ஆய்வு செய்தார்.தென்மேற்கு ரயில்வே துறை சார்பில், பெங்களூரு கோட்டத்திலிருந்து தர்மபுரி வழியாக சேலம், ஈரோடு, திருச்சி, மயிலாடுதுறை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட மேற்கு மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரயில்வே பாதை செல்கிறது.

இதில், தர்மபுரியில் மட்டும் பிரதான நகரங்களை இணைக்கும் அதிமுக்கிய நான்கு இடங்களில் ரயில்வே பாதை கடந்து செல்கிறது. வெண்ணாம்பட்டி பகுதியில் ரயில் கடக்கும்போதெல்லாம், அங்குள்ள ரயில்வே கேட் அடைக்கப்படுவதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும், தர்மபுரி ரயில்வே நிலையம் அருகே வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அமைந்துள்ளதாலும் அடிக்கடி ரயில்வே கேட் பூட்டப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் போக்கிட, வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தர்மபுரி-பாலக்கோடு சாலையில் முத்துக்கவுண்டன்கொட்டாய், பென்னாகரம் சாலையில் குமாரசாமிப்பேட்டை, சேலம் சாலையில் அதியமான்கோட்டை மற்றும் தர்மபுரி ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் ஆகிய நான்கு இடங்களில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என கடந்த 2013ம் ஆண்டு ஒன்றிய ரயில்வே துறை அறிவித்தது. இதில், ரயில்வேகேட்(கடவுப் பாதை) இடத்தில் ரயில்வே துறையும், சாலைகள் உள்ள இடத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறையும்(திட்டங்கள்) இணைந்து இப்பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, குமாரசாமிப்பேட்டை மற்றும் பாலக்கோடு சாலை, அதியமான்கோட்டை ரயில்வே கேட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.

வெண்ணாம்பட்டி ரயில்வே கேட்டில் கடந்த 11 ஆண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நான்கு மேம்பாலங்களில் 3 பாலங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் பாதையில் மட்டும் வாகனங்கள் காத்திருக்கும் நிலைக்கு தீர்வு காணப்படவில்லை. தர்மபுரி ரயில்நிலையத்துக்கு மிக அருகில் இருக்கும் இந்த ரயில்வே பாதையில் பயணிகள் ரயில், விரைவு ரயில், சரக்கு ரயில்கள் கடந்து செல்லும்போது, நாளொன்றுக்கு 36 முறை இப்பாதை அடைத்து திறக்கப்படுகிறது. அப்போது 15 நிமிடங்களும், சில ரயில்கள் கடக்கும்போது சுமார் 30 நிமிடங்களும் ஆவதால், தர்மபுரி நகரிலிருந்து வெண்ணாம்பட்டி குடியிருப்புப் பகுதி, ஆயுதப்படை குடியிருப்புப் பகுதி, குள்ளனூர், தோக்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

மேம்பாலம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், அந்த ஆய்வில் வெண்ணாம்பட்டி ரயில்வே கேட்டில் பாலம் அமைக்கவும், அதனையொட்டி அணுகு சாலை அமைக்கவும் போதிய இடம் இல்லாததாலும், சாலையின் இருபுறமும் நெருக்கமாக குடியிருப்புகள் உள்ளதால், அவற்றை கையக்கப்படுத்துவதோ அல்லது இழப்பீடு வழங்குவதோ பெரும் சிரமம் மற்றும் பெரும் பொருள் செலவு ஆகும் என்பதாலும், மாற்று வழியில் செயல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டது.

அதன்படி, பாரதிபுரத்தில் 66 அடி தார்ச் சாலையிலிருந்து வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதான நுழைவு வாயில் வரை பாலம் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த வழியே மேம்பாலம் அமைப்பதால், நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்டவை எளிதாகவும், பாலம் கட்டுமானத்தை விரைந்து மேற்கொள்ள இயலும் எனவும் நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுத்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ரயில்வே துறையும் கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஒப்புதல் வழங்கியது. எனினும் பாலம் கட்டுமான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில், தர்மபுரி கலெக்டர் சாந்தி நேற்று ரயில்வே பாலம் கட்டப்படவுள்ள இடத்தை திடீரென ஆய்வு செய்து பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: தர்மபுரி ரயில்வே திட்டப்பணிகள் 2010-11ம் ஆண்டு திட்டத்தின் கீழ் வெண்ணாம்பட்டி சாலை ரயில்வே கேட்(கடவு) எண்.41-க்கு மாற்றாக தர்மபுரி-சிவாடி ரயில் நிலையங்களுக்கு இடையில் பாரதிபுரம் 66 அடி சாலையில் சாலை மேம்பாலம் அமைத்தல் மற்றும் ரயில்வே நடைபாதைச் சுரங்கம் அமைத்தல் பணிக்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இப்பணியானது கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம்தேதி அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறைக்கான மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நிர்வாக ஒப்புதல் பெற ரூ.36.15 கோடிக்கு கருத்துரு தயாரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மே 23ம்தேதி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பாலம் பணிக்கு நில எடுப்பு, முன் ஆயத்தப்பணி மற்றும் சேவைச் சாதனங்களை மாற்றியமைத்தல் பணிகளும், நில எடுப்பிற்கான இழப்பீடு தொகை நில உரிமையாளர்களுக்கு வழங்கும் பணிகளும் தற்போது நடந்து வருகிறது. நிர்வாக ஒப்புதல் பெற்றவுடன் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர்(திட்டங்கள்) பிரபாகரன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், தர்மபுரி வருவாய் தாசில்தார் ஜெயசெல்வம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post வெண்ணாம்பட்டியில் ₹36.15 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கருத்துரு appeared first on Dinakaran.

Related Stories: