ஆடிக் கார்த்திகை – 29.7.2024
இல்லங்களில் நடைபெறும் இனிய வேல் பூஜை
ஆடிக் கார்த்திகையில், முருகனை வழிபடுவது சிறப்பானது. அதுவும், விசேஷமாக அபிஷேக ஆராதனைகளை செய்தால் கூடுதல் சிறப்பு. மேலும், முருகனின் திருவுருவத்திற்குப் பதிலாக முருகப் பெருமானின் வேலாயுதத்தை வைத்துப் போற்றி வணங்குவது மரபாகவும் இருந்திருக்கிறது. முருகனை வழிபடுவதும், அவனது வேலை வழிபடுவதும் ஒன்றேயாகும். ஆகையால், அந்த வேலாயுதத்தை எப்படி பூஜிப்பது என்பது பற்றி சிந்திக்கலாம். வீட்டில் மிகச் சிறிய அளவிலான “முருகனின் வேலை’’ வைத்து வழிபடலாம். அந்த வேலாயுதத்திற்குப் பால், தயிர் முதலியவற்றால் அபிஷேகம் செய்து, சிவந்த ஆடை மலர்கள் சூட்டி, அர்ச்சனை செய்ய வேண்டும்.
பின்னர், வேலின் புகழைக் கூறும் வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு, வேல் அலங்காரம், வேலாயுத சதகம் ஆகியவற்றை இயன்றவரை பாராயணம் செய்யலாம். பின்னர், தூப தீபம் காட்டி, கற்கண்டு, சர்க்கரை உலர்ந்த பழங்கள் ஆகியவற்றைப் படைத்துத் தண்டனிட்டு வணங்க வேண்டும்.
வேலாயுதத்தை வணங்கி வருபவர்களுக்கு, அகப்புறப்பகைகள் நீங்கி இனிமையான வாழ்வு கிட்டும் என்பது அசைக்க முடியாத உண்மையாகும். வேலாயுதத்தை வணங்கி வருவதால், அந்த வீட்டில் தீமைகள் எதுவும் அண்டாது. செல்வம் பெருகும். திருமகள் அருள்கிட்டும். பகைவர்கள் அஞ்சி ஓடுவர். பில்லி சூன்யம் விலகும். நினைத்ததை நடத்தி வைக்கும். கவலைகளை ஒழித்து மனத்தை இன்பத்தில் நிலை நிறுத்தும். வீண் பழிகள் அணுகாது என்று உறுதிபட வேல் அலங்காரம், வேற்பதிகம் முதலான நூல்களில் குறித்துள்ளார்.
மாங்கல்யம் காக்கும் வேல்
திருமணத்தில் முதன்மைச் சடங்காக இருப்பது மணமகன், மணமகளுக்குத் தாலி கட்டுவதாகும். தாலியை மங்கலஅணி, மங்கலநூல், மங்கலநாண், மங்கலசூத்திரம் நூல் என்று பல பெயர்களால் அழைக்கின்றனர். கணவனின் ஆயுளை நீட்டித்துப் பெண்ணிற்குத் தீர்க்க சுமங்கலியாக இருக்கும் வரத்தை அருளும் மூர்த்தியாக இருப்பது வேலாயுதமாகும்.
பெண்களின் தாலிக்கு வேல் வேலியாக இருக்கிறது. தேவர் கோமானாகிய இந்திரனின் மனைவியான இந்திராணியும், மற்ற தேவமாதர்களும் மங்கல மடந்தையராக இருப்பதற்கு வேலே காரணம். அருணகிரிநாதர், இதனைப் பல இடங்களில் குறித்துள்ளார். முருகனின் வேலாயுதம் புரிந்த கருணையாலே சசிதேவி மங்கலத்துடன் விளங்குகிறான் என்று குறிப்பிடுகிறார். பெண்கள் வேலை வழிபடுவதால், நீண்ட ஆயுளுடன் மங்கல மடந்தையாக வாழும் வரம் கிடைக்கும் என்பது உறுதி.
மயிலாரில் வேல் வழிபாடு
தீபாவளியை அடுத்து வருவது மயிலார் வழிபாடாகும். இது துணியோடு தொடர்புடைய தொழிலாளர்களுக்கே உரியதாகும். இதில் நடுவீட்டில் சுவரில் கோவை இலையைத் தீட்டிப் பச்சையர்க்கி அதில் மயில் வடிவத்தை எழுதி வழிபடுவர். மயிலோடு வேல் வடிவமும் சேர்த்தே வரையப்படும். தாம் மேற்கொள்ளும் வேலைகளுக்கு வேலாரயுதம் துணை நின்று காக்கவேண்டும் என்பதற்காக மயிலுடன் வேலும் வணங்கப்படுகிறது.
சமண சமயத்தில் வேல்
அஹிம்சையைப் போதிக்கும் சமண சமயத்தில் ஆயுதங்களை வழிபடும் வழக்கமில்லை. எனினும், உலக நடப்பிற்கு ஆதாரமான தருமத்தின் வடிவை ஒரு சக்கரமாக உருவகம் செய்துள்ளனர். அந்தத் தருமம் ஆண், பெண் உருவங்களைத் தாங்கும்போது முறையே தருமயக்ஷன், தருமயக்ஷி என்ற பெயர் பெறுகின்றது. சில இடங்களில் சமண சமயத்தின் குறியீடாக திரிசூலம் அமைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இந்தச் சூலத்தின் மும்முனைகளும் நல்லொழுக்கம், நல்ஞானம், நல்லறிவு என்ற முப்பொருட்களைக் குறிக்கின்றது. இந்தத் திரிசூலத்தால் ஆன்மா தீயசக்திகளிடமிருந்து வெற்றி பெறுகின்றது என்று கருதுகின்றனர். இதையொட்டித் தீர்த்தங்கரர்களுக்குச் சூலபாணி என்பதும் பெயராயிற்று. அபூர்வமாக வேல் போன்ற வடிவிலும் தீர்த்தங்கரர்களின் உருவங்களைச் செதுக்கி வைத்து வழிபடுகிறார்கள். வடநாட்டில் சில இடங்களில் இத்தகைய உருவங்கள் கிடைத்துள்ளன.
இதில் வேலின் இலைபோன்ற அமைப்பில் நவக்கிரக தீர்த்தங்கரர்கள் எனப்படும் ஒன்பது தீர்த்தங்கரர்களின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. நவக்கிரகங்களில் ரத்தின மயமான ஜின பிம்பங்களைக் கொண்ட பொன்னாலாகிய ஜைன ஆலயங்கள் இருக்கின்றன. இவ்வகையில் சூரிய மண்டலத்தில் பத்மபிரபருக்கு, சந்திரமண்டலத்தில் சந்திரப்பிரபருக்கும், செவ்வாய் மண்டலத்தில் வாசுபூஜ்யருக்கும், புதன் மண்டலத்தில், மல்லிநாதருக்கும், குரு மண்டலத்தில் மகாவீரவர்தமானருக்கும், சுக்கிர மண்டலத்தில் புஷ்பதந்தருக்கும், சனி மண்டலத்தில், முனிசூவ்ரதருக்கும், இராகு மண்டலத்தில் நேமிநாதருக்கும், கேதுமண்டலத்தில் பார்சுவநாதருக்கும் ஆலயங்கள் உள்ளன. இத்திருவுருவத்தை வழிபடுவதால் நவக்கிரகங்களின் தொல்லைகள் தம்மை அணுகாதென்று நம்புகின்றனர்.
இலைகளும் வேல்களும்
பொதுவாக, நாம் காணும் வேல்களின் தலைப் பகுதியை வெற்றிலையைப் போல் அமைத்துள்ளனர். இவ்வகையான வேலை இலை வடிவேல் என்பர். சூலத்தை மூவிலை வேல் எனவும் கூறுவது இங்கே சிந்திக்கத்தக்கதாகும். பன்னீர் இலையும் வேலின் வடிவத்தில் இருக்கிறது. விபூதி முருகனின் அருள் வடிவம். அதனால் அவனது விபூதியை வேல் வடிவமான பன்னீர் இலையில் வைத்துத் தரும் வழக்கம் வந்தது என்பர். இலங்கையில் ராஜவள்ளிக்கிழங்கு முளைவிட்டு வரும்போது அதன் இலைவேல் வடிவில் இருப்பதால், அதைச் சிறப்புடன் போற்றுகின்றனர். இலங்கை வடமராச்சியில் உள்ள செல்வச் சந்நதியில் வேல் விடுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆல இலையில் விபூதியால் வேல் வடிவை வரைந்து வழிபடுகின்றனர். மூங்கில் இலை வடிவிலும் வேல்கள் அமைந்திருந்தன. இப்படி வேலின் வடிவம் பலவாக இருந்தாலும் மக்கள் வெற்றியை போன்ற வடிவமுடையதையே விரும்பி வழிபடுகின்றனர். சிலர் அதை அரச இலை போலவும் அமைத்துள்ளனர்.
வேலும் பெண்களின் கண்களும்
பெண்களின் கண்கள் அழகாக இருக்கின்றன. கவிஞர்கள் அவற்றைச் சதா உலவிடும் மீன், துள்ளும் மான், குவளை மலர்கள், தாமரை மலர்கள், செங்கழுநீர்ப்பூக்கள் ஆகியவற்றிற்கு ஒப்பிடுவர். அதே சமயம் அவற்றை வீரம் விளைவிக்கும் வலிய வாளாகவும், வேலாகவும் உவமித்துப் பெண்களை வேலன்ன விழியாள் என்றும், வேல்விழி மாதரார் என்றும் பலவாறு கவிஞர்கள் வர்ணிக்கின்றனர்.
சிக்கல், திருவெண்டுறை, திருவேற்காடு முதலிய தலங்களில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு வேல் நெடுங்கண்ணி என்பது பெயர். ஆக்கூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு வாள் தடங்கண்ணி என்பது பெயர். அருணகிரிநாதர் வள்ளியம்மையின் கண்களை வேலுக்கு உவமையாகக் கூறுவார். ரேல் போல அவள் விழி இருந்தது என்று கூறாமல் மறச்சிறுமியான வள்ளியின் கண்களைப் போல் வேல் இருக்கிறது என்கிறார். மறச்சிறுமி விழிக்கு நிகராகும் என்பது வேல் வகுப்பில் அவர் காட்டும் காட்சியாகும். வேலை உவமையாகக் கூறியதற்குக் காரணம் அதன் அழகும் கூர்மையும் மட்டுமல்ல. அது அவளது கண்களைப் போல் அருள் வழங்கும் தன்மையோடு இருப்பதாலேயாகும்.
வேல் தீபம்
கோயில்களில் செய்யப்படும் சிறப்புப் பூஜைகளின் போது சிறப்பான தீபாராதனை நடைபெறுகிறது. இந்தச் சோடச தீபவரிசையில் ரிஷப தீபம், கஜ தீபம், மயூர தீபம், குக்குட தீபம், திரிசூல தீபம் எனப் பலவகையான தீபங்கள் காட்டப்படுகின்றன. இவ்வரிசையில் வேல் தீபமும் இடம் பெறுகிறது. இதைப் பெருமான் முன்பு சுழற்றிக் காட்டும்போது வேலுக்குரிய காயத்திரி ஓதப்படுகிறது. இது, ‘‘தசவதனாய வித்மஹே ஜ்வாலாமாலாய தீமஹி தன்னோ பராசக்திப் பிரயோதயாத்,’’ என்பதாகும். ஆடிக் கார்த்திகையை முன்னிட்டு இரு சிறப்புக் கோயிலை தரிசிக்கலாம்.
மூன்று வடிவில் முருகன்
சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து சுமார் பத்து கி.மீ. தூரத்திலுள்ள காட்டுக்கோட்டை என்ற தலத்தில் மலைக்கோயிலில் 60 ஆண்டுகளைக் குறிக்கும் 60 படிக்கட்டுகளைக் கொண்ட மலையின் மேல் சுவாமிமலையைப் போல் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு முருகனுக்கு மூன்று சந்நதிகள் உள்ளன. முருகப் பெருமான் மூன்று வடிவில் இங்கு எழுந்தருளியுள்ளார்.
அனைத்தும் சுயம்பு மூர்த்தம் என்று சொல்லப்படுகிறது. புன்முறுவல் பூத்த குழந்தை வடிவமாக மூலஸ்தானத்திலும், தண்டாயுதபாணியாக இன்னொரு சந்நதியிலும், வள்ளி, தெய்வானையுடன் இன்னொரு சந்நதியிலும் அருள்புரிகிறார். இங்கு முருகனுக்குரிய சிறப்பு நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். ஆத்தூரிலிருந்து இக்கோயிலுக்குச் செல்ல வாகன வசதிகள் உள்ளன.
பாவம் தீர்க்கும் முருகன் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவியிலும், மயிலாடுதுறையில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவிலும் திருவிடைக்கழி முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவ விமோசன சுவாமியாக வீற்றிருக்கிறார். இவரை தரிசித்தால் பாவம் நீங்கும். இங்குள்ள முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார்.
சுவாமியின் வலது கை அபயம் தரும் விதத்திலும், இடது கை தொடையில் வைத்தபடியும் உள்ளன. கருவறையில் ஒரு சிவலிங்கம் உட்புறத்திலும், மற்றொரு லிங்கம், முருகனின் முன் புறமும் உள்ளன. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது, முருகன் பூஜித்த பர்தரபர்வதலிங்கத்திற்கு முதலில் பூஜை நடக்கும்.
குராமரத்தின் அடியில் தியானம் செய்ய மனத்தெளிவு, அறிவுக் கூர்மை உண்டாகும். சரவண தீர்த்தம், கங்கை கிணறு என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஏழு நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது. முருகனை மனம் செய்ய விரும்பிய தெய்வானை தவம் செய்த தலம் இது. இங்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. தெய்வானையின் முகம், வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல் உள்ளது. திருமணத்தடை அகல இவரை வெள்ளிக் கிழமையில் வழிபடலாம்.
முதல் படை வீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்தாலும் இத்தலம் ‘விடைக்கழி’ எனப்படுகிறது. சூரபத்மனை முருகன் கொன்றார். சூரபத்மனின் மகனான இரண்யாசுரன், முருகனுக்கு பயந்து தரங்கம் பாடி கடலுக்குள் ஒளிந்தான். சிவ பக்தனான அவனையும் பராசக்தியின் அருளால் முருகன் கொன்றார்.
அசுரனாக இருந்தாலும், சிவ பக்தனைக் கொன்றதால், முருகனுக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க இங்குள்ள குர மரத்தின் அடியில் தவமிருந்தார். இதனால் ‘‘திருக்குராவடி’’ என இத்தலத்திற்கு பெயர் வந்தது. இவரை தரிசித்தால் பாவம் நீங்கும். திருமணத்தடை நீங்கும்.
The post அழகு முருகனின் வேல் தரிசனம் appeared first on Dinakaran.