ஆனால் ஜோதிடர் ஒருவர், இவளுடைய ஜாதகத்தைப் பார்த்து விட்டு இவளுக்கு `வைதவ்ய தோஷம்’ (இளமையில் கணவனை இழந்து விதவையாகும் நிலை) இருக்கிறது. அதனால் இவளை யார் மணமுடித்தாலும் மணந்தவன் ஆயுள் முடிந்துவிடும் என்று சொல்லிவிட்டார். இது எப்படியோ ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இனி இந்தப் பெண்ணை யார் கட்டுவார்கள்? அது மட்டும் அல்ல, இவ்வளவு துரதிருஷ்டம் பிடித்த பெண்ணை வைத்துக் கொண்டு நாங்கள் எத்தனை காலம் வாழ முடியும்? எனவே நாங்கள் எல்லோரும் சாக வேண்டியதுதான் என்று விரக்தியாக அழுதுகொண்டே பேசுவதைக் கண்டார். கூரேசன் உடனே முடிவெடுத்தார்;‘‘சரி, நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்களுடைய இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்கிறேன்.’’‘‘என்ன தீர்வு?’’‘‘உங்கள் மகளை நான் திருமணம் செய்துகொள்கின்றேன்.’’ இப்படிச் சொன்னவுடன் அவர்கள்; “வேண்டாம், வேண்டாம். எங்கள் துன்பம் எங்களோடு போகட்டும். நீங்கள் இந்த துரதிஷ்டசாலியை மணந்து கொண்டு, உங்கள் உயிரைவிட
நாங்கள் சம்மதிக்கமாட்டோம்.
விஷயம் தெரிந்த பிறகு எப்படி எங்களால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியும்?’’ கூரேசன் அவர்களைச் சமாதானப்படுத்தி அவர்கள் பெண்ணை திருமணம்செய்து கொண்டார். அந்தப் பெண்ணின் பெயர் ஆண்டாள். சிறந்த குணமும் ஞானமும் பொறுமையும் உடையவர். ஒரு நாள் அவர்கள் தங்கள் செல்வங்களை எல்லாம் ஏழை எளியவர்களுக்குக் கொடுத்துவிட்டு ராமானுஜரின் சீடர்களாக ஸ்ரீ ரங்கத்திற்குச் சென்றார்கள். அங்கே உஞ்சவிருத்தி (பிட்சை) செய்து வாழ்ந்தார்கள். கூரேசன் எப்போதும் பகவத் பக்தியில் திளைத்தார். கற்ற கல்வியை மற்றவர்களுக் கெல்லாம் கற்பித்தார் திருவரங்கம் கோயிலிலே ராமானுஜர் இட்டகைங்கரியத்தைச் செய்தார். அவர் சொல்லச் சொல்ல ஸ்ரீ பாஷ்யம் எழுதினார். இப்படி வாழ்ந்த அவர்களுக்கு வெகு காலம் குழந்தை இல்லாமல் இருந்தது. பின் அரங்கன் அருளால் இரண்டு குழந்தைகள் பிறந்தன. அதில் ஒருவர்தான் பராசர பட்டர். மிகச் சிறந்த அறிவாளி. ஸ்ரீ ராமானுஜருக்கு மிகவும் பிடித்தவர். இந்த பராசர பட்டர் வாழ்வில் நடந்த ஒரு அற்புதமான செய்தி இது.
இந்தச் சம்பவம் நடந்தபோது அவருடைய தந்தை கூரேசன் ஆசார்யன் திருவடி அடைந்திருந்தார். (இறைவனடி சேர்ந்திருந்தார்) (ஜோதிடர் சொன்னது போலவே ஆண்டாளின் கணவன் கூரேசன் முதலில் இறக்கும்படி நேரிட்டது. ஆனால் அப்போது கூரேசனுக்கு வயது 120ஐ நெருங்கிக்கொண்டிருந்தது) ஆயினும் கூரத்து ஆண்டாள் மிகுந்த வைராக்கியத்துடன் பகவானையே நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தார். மிகச் சிறந்த ஞானச் செழிப்போடு அந்த அம்மையார் விளங்கினார். இந்தச் சூழலில், பட்டர் ஒரு நாள் நீராடி வந்தார். வரும் வழியில் ஏதோ மிதிக்கக் கூடாத ஒரு பொருளை மிதித்துவிட்டார். உடனே அவர் திரும்பவும் ஒருமுறை நீராடிவிட்டு இல்லம் திரும்பினார். ஆயினும் அவருடைய மனதில் ஏதோ ஒரு குறையும் துன்பமும் இருந்து கொண்டே இருந்தது. மிதித்த அசுத்தத்தை நீரால் கழுவி விட்டாலும், ஏதோ ஒரு வகையில் மனதில் அது ஏறிக்கொண்டு அவரைச் சிரமப்படுத்திக் கொண்டிருந்தது.
தன்னுடைய அன்னையாரிடம் சென்று, “இதற்கு என்ன பரிகாரம்?” என்று கேட்டார். கூரத்து ஆண்டாள், வெகுநேரம் யோசித்து விட்டுப் பின், பட்டரிடம் சொன்னார்; ‘‘நீ என்ன செய்கிறாய். நேராக ஒரு எளிய பாகவதரைப் பார். பிறந்த குலத்தால் உயர்வு கருதாதவராக இருக்க வேண்டும். நைச்சியம் (பணிவு) இருக்க வேண்டும். அப்படி ஒருவரைப் பார்த்து அவருடைய திருவடித் தீர்த்தத்தைப் பெற்றுக்கொள். அதுவே இதற்குப் பிராயச்சித்தம்” அன்னையின் வார்த்தையின் பொருள் வேத பண்டிதரான பராசர பட்டருக்குப் புரிந்தது. ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. பராசர பட்டரின் கல்வியறிவும், சாஸ்திர அறிவும், ஞானமும், அவர் அரங்கனுக்குச் செய்யும் கைங்கரியமும் ஸ்ரீ ரங்கத்தில் உள்ள எல்லோருக்கும் தெரியும். அவரிடம் நெருங்கிப் பேசுவதற்கே தயங்குவார்கள் அத்தனை மதிப்பு அவரிடத்தில் இருந்தது. இந்தச் சூழலில் வேதம் படித்த பண்டிதர்கள்கூட பராசரப் பட்டரின் மேதமையைக் கண்டு தங்கள் பாத தீர்த்தத்தைத் தர சம்மதிக்க மாட்டார்கள்.
அதனால் தங்களுக்குப் பாவம் வரும் என்று நினைப்பார்கள். கேட்டாலே “அபசாரம்.. அபசாரம்” என்று காத தூரம் ஓடுவார்கள். இதில் சாதாரண பாகவதர் எப்படிக் கிடைப்பார்? கிடைத்தாலும் எப்படிச் சம்மதிப்பார்? அப்பொழுது ஒரு எளிய பாகவதர் பட்டரின் திருவீதி வழியே நடந்து சென்றார். இதைப் பார்த்த பராசர பட்டரின் அன்னையார் கூரத்து ஆண்டாள், ‘‘போ.. போ, அதோ தீர்த்தம் போகிறது பார்’’ என்றார். அந்த பாகவதர் பெயர் தொட்டமால் சுட்டார். ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையருக்கு ஸ்ரீ பாதம் தாங்குபவர். உடனே பட்டர் அவர் இருக்கும் இடத்தில் நெருங்கி விஷயத்தைச் சொல்ல அவர்; ‘‘ஐயோ இது அடுக்குமா, நீங்கள் இப்படிக் கேட்கலாமா’’ என்று இரண்டு காதையும் பொத்திக்கொண்டு ஓடத் தொடங்கினார்.இருந்தாலும், பட்டர் அவரை அழைத்துச் சமாதானப்படுத்தி, ஒரு வழியாக இணங்க வைத்து, அவருடைய பாததீர்த்தத்தைப் பெற்றுக்கொண்டார். அதனால், மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தார்.
நல்ல ஒழுக்கம், இறையன்பு, பிறரை மதிக்கும் தன்மை, மனத் தூய்மையோடு உடல் தூய்மை, இப்படி உள்ளவர்களிடம் பிறந்த குலத்தைப் பற்றிய பெருமையைக் கருதுவதோ, பேசுவதோ தாழ்வாக நினைப்பதோ கூடாது. ஆன்மிகத்தின் அடிப்படையான விஷயம் இது. இதைக் கடந்து எத்தனை சாஸ்திரம் படித்தாலும், அது பயன் தராது. பெரியாழ்வார் சொல்லியதைப் போல, ‘‘பண்டைக் குலம் (பிறந்த குலம்) எதுவாக இருந்தாலும் தொண்டர் குலம்’’ என்று வந்த பிறகு தொண்டர் குலம் என்ற ஒரே குலம்தான் ஆன்மிகத்தில் உண்டு. அந்த உயர்ந்த நிலை பிறப்பினால் வருவது இல்லை. பகவத் பக்தியினால் வருவது என்பதை நிரூபிக்கும் நிகழ்ச்சிதான் இது. பல்லாண்டுகளுக்கு முன் திருவரங்கத்தில் நடைபெற்றது.
தேஜஸ்வி
The post பகவானின் தொண்டர்களைப் பணிந்தால் எல்லாத் துயரங்களும் போகும் appeared first on Dinakaran.