இந்த வார விசேஷங்கள்

கோஷ்டாஷ்டமி 9.11.2024 – சனி

இன்று அஷ்டமி திதி. துர்கையை வணங்க ஏற்ற நாள். இந்த நாளில் மாலை சிவன் கோயிலுக்குச் சென்று வடக்குப் பக்கமாக உள்ள துர்க்கையை தரிசிப்பது நல்லது. அது தவிர இன்றைய தினம் கோஷ்டாஷ்டமி ஆகும். மாத்ஸ்ய புராணம் குறிப்பிடும் இந்த கோஷ்டாஷ்டமி நாள் பசுக்களைக் கொண்டாடும் ஒரு திருநாள். பசு மாடு வைத்திருப்பவர்கள் அந்த கோசாலையை சுத்தம் செய்து பசுக்களுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, பூ வைத்து, கோ பூஜையை மேற்கொள்வார்கள். வீடுகளில் பசுக்கள் கிடையாத போது பசு இருக்கும் கோயில்களில் உள்ள கோ சாலைக்குச் சென்று, அங்கு இருக்கும் பசுக்களை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். இதன் மூலம் பசுக்களில் வாசம் செய்யும் முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசிர்வாதமும் அந்த மகாலட்சுமியின் ஆசிர்வாதமும் நமக்குக் கிடைக்கும்.

பசுக்களுக்கு வாயுறை வழங்க வேண்டும். யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே – திருமூலர் திருமந்திரம் இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும். இன்றைய தினம் பசுவுக்கு இரண்டு வாழைப்பழம் கொடுத்தாலும் அது உங்கள் புண்ணிய கணக்கில் சேர்ந்து விடும். பாவக் கணக்கை கழிக்கும். அது மட்டுமல்லாமல் இன்று மாலை உங்களுடைய வீட்டில் பஞ்சகவ்ய விளக்கு ஒன்று ஏற்றலாம். அது சிறப்பான பலனைத் தரும். காரணம் பஞ்சகவ்ய விளக்கு என்பது பசுக்களில் இருந்து எடுக்கப்படும் ஐந்து பொருட்களைச் சேர்த்து செய்யப்படக்கூடிய விளக்கு. உங்களுடைய வீட்டில் கோமாதாவின் சிலை அல்லது கோமாதாவின் திருவுருவப்படம் இருந்தால் இன்று மாலை அந்த கோமாதாவுக்கு சிறப்புப் பூஜைகள் செய்ய வேண்டும். கோமாதா சிலையாக இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து ஆரத்தி காண்பித்து குடும்பத்தோடு வழிபாடு செய்யுங்கள். இதனால் சகல நன்மைகளும் கிடைக்கும்.

முதலாழ்வார்கள் திருநட்சத்திரம் 9.11.2024 – சனி

ஆழ்வார்கள் 12 பேர். அவர்கள் எழுதிய அருந்தமிழ் நூல் நாலாயிரத்திவ்ய. பிரபந்தம். அவர்கள் வரிசை இது.

பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை
அய்யன் அருள்மாறன் சேரலர் கோன் துய்ய பட்ட
நாதனன் பர்த்தாள் தூளி நற்பாணன் நல் கலியன்
ஈதிவர் தோற்றத் தடைவாம் இங்கு

இந்த பிரபந்தம் முதல் ஆழ்வார்
களிடமிருந்து மூன்று அந்தாதிகளாக அவதரித்தது. காலத்தால் முந்தியவர்கள் என்பதால் ‘‘முதல் மூவர்’’ என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் ஐப்பசி மாதம் திருவோணம், அவிட்டம், சதயம் எனும் அடுத்தடுத்த நட்சத்திரத்தில் அவதாரம் செய்தவர்கள்.

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்! – எப்புவியும்
பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று சிறப்பால்.

என்று இவர்கள் அவதரித்த நாள் சிறப்பை உபதேச ரத்தினமாலையின் ஒரு பாசுரம் கொண்டாடுகிறது.இவர்கள் மூவருமே அயோனிஜர்கள் அதாவது தாயின் கருவிலிருந்து பிறவாதவர்கள். எனவே, எல்லா திருமால் ஆலயங்களிலும் இவர்கள் அவதார தினம், இன்றும், நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.முதல் ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்தில் (கச்சி) திருவெஃகாவில் ஐப்பசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் தோன்றினார். இவர் அருளியன 100 பாசுரங்கள் கொண்ட முதல் திருவந்தாதி ஆகும். (திருவெஃகா என்பது சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில் ஆகும்.) அடுத்தது பூதத்தாழ்வார். இவர் திருக்கடல் மல்லையில் (மாமல்லபுரம்) ஐப்பசி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர்.

இவர் அருளிய 100 பாசுரங்கள் கொண்ட நூல் இரண்டாம் திருவந்தாதி என்று அழைக்கப்படுகின்றது. மூன்றாம் ஆழ்வார் பேயாழ்வார். இவர் திருமயிலையில் (மயிலாப்பூர்) ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில் தோன்றினார். இவர் அருளிச் செய்தன 100 பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதி ஆகும். இவர்கள் பிறந்ததிலிருந்தே எம்பெருமான் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள். இறையனுபவத்தில் திளைத்திருந்தவர்கள். வாழ்வின் ஒரு தருணத்தில் திருக்கோவலூர் இடைகழியில் சந்தித்துக் கொண்ட இவர்கள் மூவரும், அப்போதிலிருந்து ஒன்றாகவே இருந்து, பற்பல திவ்ய தேசங்களுக்கு பயணித்தனர். இவர்கள் ‘‘ஓடித் திரியும் யோகிகள்’’ – அதாவது எப்போதும் யாத்திரை செய்பவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இதனால் இவர்கள் அவதார விழா திருக்கோவலூரில் வெகு சிறப்பாக
நடைபெறும்.

ராஜராஜ சோழன் சதய விழா 10.11.2024 – ஞாயிறு

மாமன்னர் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இதனை முன்னிட்டே ஆண்டு தோறும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ராஜராஜனின் பிறந்த நட்சத்திர தினத்தை சதய விழா என்ற பெயரில் இரண்டு தினங்கள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழா மங்கள இசை மற்றும் திருமுறை விண்ணப்பத்துடன் துவங்கும். சைவர்கள் போற்றும் திருமுறைகளை மீட்டுத் தந்தவர் ராஜராஜன். தஞ்சை கோயில் வடித்தெடுக்கவும் அங்கு வழிபாடுகள் நடக்கவும் ஒரு பொன் காசு கொடுத்தவர்களைக்கூட மறக்காமல் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளார் ராஜ ராஜ சோழன். பொன்னியின் செல்வன் என்பது உள்ளிட்ட 40க்கும் அதிகமான சிறப்புப் பெயர்களால் போற்றப்படுபவர் ராஜராஜன். அதனால்தான் அவரது புகழ் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் போற்றப்படுகிறது. இவர் பதவியேற்ற 985ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டே சதய விழா கொண்டாடப்படுகின்றது. அந்த விழா இன்று.

திரு இந்தளூர் கருட சேவை 11.11.2024 – திங்கள்

ஸ்ரீ பரிமள ரங்கநாதர் பெருமாள் கோயில் திருஇந்தளூரில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள ஒரு பகுதியான திருவிழந்தூர் தான் திருஇந்தளூர். பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் ஒன்றான இக்கோயில் காவிரியை ஒட்டி அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் ஸ்ரீ பரிமள ரங்கநாதன். மருவினிய மைந்தன், சுகந்த வனநாதன், அந்திய ரங்கன் என்றும் அழைக்கப்படுகிறார். கிழக்குத் திசையை நோக்கித் வீரசயன திருக்கோலத்தில் தம் சேவையைத் தருகிறார். சந்திரனுக்கு (சந் திரன்) பிரத்யட்சம். இங்கு துலா காவிரி விழா பிரசித்தம். அந்த உற்சவத்தில் இன்று கருட சேவை.

சர்வ ஏகாதசி 12.11.2024 – செவ்வாய்

இந்த ஏகாதசிக்கு பிரபோதன ஏகாதசி என்று பெயர். ஏகம்+ தசி, ‘‘ஏகாதசி’’ ஏகம் என்றால் ஒன்று, தசி என்றால் பத்து, எனவே ‘‘ஏகாதசி’’ எனப்படுகிறது. சயன ஏகாதசி, பரிவர்த்தனை ஏகாதசி, உத்தான ஏகாதசி என்னும் பிரபோதன ஏகாதசி, ஸ்ரீ வைகுந்த ஏகாதசி என்ற இந்த நான்கு ஏகாதசி களையும் வைணவம் சிறப்பாகப் போற்றும். இந்த நாளில் துளசியால், பெருமாளை பூஜை செய்பவர்கள் வைகுண்டம் செல்வார்கள். துளசியைத் தரிசிப்பது, துளசியைத் தொடுவது, துளசியின் பெயரைச் சொல்வது, துளசியைத் துதிப்பது, துளசியை நட்டு வளர்ப்பது, துளசிக்குத் தண்ணீர் விடுவது, துளசியை பூஜை செய்வது என எதைச் செய்தாலும், பல யுகங்கள் வைகுண்ட வாசத்தை அளிக்கும் ஏகாதசி இது. மூவுலகங்களிலும் கிடைக்கப்பெறாத பொருளும், ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கப்பெறும். ப்ரபோதினி ஏகாதசி விரதத்தின் பலனால் பாபங்களில் மிகவும் பெரிய பாபமும் க்ஷண நேரத்தில் நஷ்டமடைகிறது.
ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதத்தை அனுஷ்டிப்பவரின் பத்து தலைமுறை மூதாதையர் மற்றும் எதிர்கால சந்ததியினர் விஷ்ணுலோகம் அடைந்து வாசம் செய்யும் பாக்கியத்தை பெறுகின்றனர். நரகத்தில் அனேக துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அவருடைய பித்ருக்களும் விடுதலை அடைந்து விஷ்ணு லோகம் அடைந்து சுக வாழ்வு பெறுவர். இந்த ஏகாதசி நாளன்று பகவானின் அருள் வேண்டி எவர் ஒருவர் தானம், தவம், ஜபம், ஹோமம், யக்ஞம் ஆகியவற்றை செய்கிறாரோ, அவர் என்றும் குறையாத புண்ணிய பலனை பெறுகிறார்.

துளசி விவாகம் 13.11.2024 – புதன்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று பெருமாளுக்குரிய புதன்கிழமை. பெருமாளுக்கு அதிக விருப்பமானது பத்ரம் எனப்படும் துளசி. துளசிச் செடி வளரும் வீட்டிலோ அருகிலோ தீய சக்திகள் நெருங்குவதில்லை. தினமும் கிருஷ்ணனை அர்ச்சித்த ஒரு துண்டு துளசித் தளத்தை சுவீகரித்தவன் நோயற்றவன், தீர்க்காயுள் கொண்டவன். பாபம் விலகியவன். துளசியால் கிருஷ்ணனுக்கு பூஜை செய்தவனின் முன்னோர்களும் கூட பாபத்திலிருந்து விடுதலை பெறுவார்கள். பெரும் புண்ணியம் தரும் துளசி விவாகம் அல்லது துளசி கல்யாணம் இன்று அனுசரிக்க வேண்டும். இதில் சாளக்கிராமம் அல்லது நெல்லி மரக் கிளையுடன் துளசிக்கு சம்பிரதாயத் திருமணம் நடைபெறும். துளசி மகிமையைப் பற்றியும், துளசிக்கும் பெருமாளுக்கும் நடந்த துளசி விவாகம் பற்றியும்
பத்மபுராணத்தில் செய்திகள் உண்டு.

திருமூலர் குருபூஜை 14.11.2024 – வியாழன்

திருமூல தேவநாயனாரின் திருமந்திரமாலை, திருமந்திரம் என்ற பெயரால் வழங்கப்படும். இந்நூல் சைவத் திருமுறைகளுள் பத்தாவதாக இடம் பெற்றுள்ளது. மூலன் என்ற இடையர் உடலில் புகுந்து திருமந்திரம் பாடிய திருமூல நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தன்று அவர் அவதாரம் செய்த ஸ்தலமான மயிலாடுதுறை மாவட்டம் சாத் தனூரில் (மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்திற்கும் இடையிலுள்ள ஆடு துறையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இன்று காலை கணபதி ஹோமம், திருமூலர் சிறப்பு ஆராதனை அபிஷேகம் நடைபெறும். எல்லா சிவாலயங்களிலும் திருமூல நாயனாரின் குரு பூஜை இன்று அனுசரிக்கப்படும்.

மாயவரம் கடைமுகம் 15.11.2024 – வெள்ளி

துலா மாதம் காவிரி நதிக்கு சிறப்பான மாதம். இந்த மாதம் முழுதும் காவேரியில் நீராடுவது சிறப்பு. கங்கையே இந்த மாதத்தில் காவேரியில் தீர்த்தமாடி புனிதமாவதால் கங்கையின் புனிதமான காவேரி என்று ஆழ்வார் பாசுரம் கூறும். சைவ வைணவ ஆலயங்களில் இந்த நீராடல் விசேஷம். ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுக தீர்த்தவாரியான இன்று மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்த விழா நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காவிரியில் நீராடி மயூரநாதரை தரிசனம் செய்ய வேண்டும். அதுபோலவே பரிமள ரங்கநாதரையும் தரிசனம் செய்ய வேண்டும்.

விஷ்ணுபிரியா

11.11.2024 – திங்கள் – திருமாலிருஞ்சோலை ரக்ஷாபந்தனம்.
12.11.2024 – செவ்வாய் – கள்ளழகர் சயன உற்சவம்.
13.11.2024 – புதன் – பிரதோஷம் கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்.
14.11.2024 – வியாழன் – திருஇந்தளூர் துலா உற்சவத்தில் திருக்கல்யாணம்.
14.11.2024 – வியாழன் – பிரசித்திபெற்ற மாயவரம் மயூரேஸ்வரர் ரதம்.
15.11.2024 – வெள்ளி – சிவாலயங்களில் அன்னாபிஷேகம்.
15.11.2024 – வெள்ளி – பௌர்ணமி கிரிவலம்.
15.11.2024 – வெள்ளி – நின்ற சீர் நெடுமாறனார் குருபூஜை.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: