வாழ்வின் மாற்றத்தை ஏற்படுத்தும் மாவிளக்கு பூஜை

மனிதவாழ்வில், பலவிதமான விருப்பங்கள் இருக்கின்றன. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் என்றில்லாமல், பலவித பொருட்களை வாங்குவதும் நமக்கு விருப்பமாக உள்ளது. இவ்வகை விருப்பங்கள் பல காரணங்களால் தடைபட்டுப் போகலாம். இந்த தடை நீங்க, மாவிளக்கு பரிகாரத்தை வீட்டிலேயே செய்யலாம். விருப்பங்களை நிறைவேற்றும் திருப்பதி வெங்கடாஜலபதிக்காக சனிக் கிழமைகளிலும், விநாயகர், முருகன், மாரி அம்மன், காளி அம்மன், காமாட்சி அம்மன் போன்ற தெய்வங்களிடம் விருப்பத்தை தெரிவிக்க விரும்பினால், செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளிலும் இவ்வழிபாட்டை செய்யலாம். இடித்து சலித்த பச்சரிசி அல்லது தினைமாவில் ஏலக்காய், வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். அதை காமாட்சி விளக்குபோல குழிவாகப் பிடித்து, அதனுள் நெய்விட்டு பஞ்சுத்திரி போட வேண்டும்.

இஷ்ட தெய்வத்தின் முன் ஒரு வாழை இலை அல்லது தாம்பாளத்தில் இரண்டு தேங்காய் முறிகள், பழம், வெற்றிலை பாக்கு மற்றும் மாவிளக்கை வைத்து ஏற்ற வேண்டும். விளக்கேற்றியதும், நாம் எந்த தெய்வத்தை நினைத்து ஏற்றுகிறோமோ, அந்த தெய்வம் வீட்டிற்குள் எழுந்தருளி இருப்பதாக எண்ணி, நம் விருப்பத்தை நிறைவேற்றித் தரும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். அந்தந்த தெய்வங்களுக்குரிய ஸ்லோகம் அல்லது பாடல்களைப் பாடுவது சிறப்பு. ஒரு நாழிகையாவது (24நிமிடம்) விளக்கு எரிவது அவசியம். வேண்டுதல் நிறைவேறிய பிறகும், மேற்கண்டவாறு மீண்டும் ஒருமுறை விளக்கேற்றி வைத்து வழிபடவேண்டும்.

இன்னும் விரிவாக இடித்தெடுத்த பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம் ஏற்றுவதே மாவிளக்கு ஆகும். இந்த மாவிளக்கு வழிபாடு சாக்த சமயத்தின் முழுமுதற் கடவுளான அம்மனுக்கு செய்யப்படுகிறது. மேலும், குலதெய்வங்களுக்கும், விநாயகர், பெருமாள் போன்ற பிற கடவுள்களுக்கும் இந்த மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. இந்த வழிபாட்டினை மாவிளக்கு ஏற்றுதல், மாவிளக்கு பார்த்தல் என பல பெயர்களில் அழைக்கின்றனர். பச்சரிசி மாவு, வெல்லப் பாகு கலந்து மாவு உருண்டையாக செய்கின்றனர். இதில் வாசனைக்காக ஏலக்காய் சேர்ப்பதும் உண்டு. திரண்ட மாவினை நீள் உருண்டையாகப் பிடித்து, அதன் மேல் எண்ணெய் ஊற்ற குழியாக செய்கின்றனர். அதில் நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை ஊற்றி திரியிட்டு விளக்கேற்றுகின்றனர். திருவிழா சமயங்களில் அவரவர் வீட்டில் செய்யப்பட்ட மாவிளக்கு ஊர்வலமாக அம்மன் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவழிபாடு நடத்தப்படும்.

தலைவலி, கால் வலி, கை வலி, உடல் வலி உள்ளிட்டவற்றால் அவதிப்படக்கூடிய பக்தர்கள், அதிலிருந்து விடுபட மாவிளக்கு ஏற்றுகிறார்கள். அவர்களுக்கு எந்த பகுதியில் வலி ஏற்பட்டு அவதிப்படுகிறார்களோ, அந்த பகுதியில் மாவிளக்கை ஏற்றி வழிபடுகிறார்கள். அப்படி மாவிளக்கு ஏற்றி வழிபடும் போது அம்மன் தங்களது நோய்களை குணப்படுத்துவதாக நம்புகின்றனர்.அவ்வாறான வேண்டுதல்களின் போது நோயுற்றவரை படுக்க வைத்து மாவிளக்கை வாழை இலையின் மீது வைத்து கண்கள், கைகள், மார்பு, வயிறு உறுப்புகளின் மீது வைக்கின்றனர். மாவிளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரியிட்டு விளக்கேற்றுகின்றனர்.

தமிழ்நாடு மாநிலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புள்ளான்விடுதி கற்பகவிநாயகர் கோயிலில் மார்கழி மாதத்தில் சஷ்டி திதியும், சதய நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் விநாயகருக்கு
விநாயகர் நோன்பு என்ற விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது இருபது நாட்களுக்கு விநாயகருக்கு பிடித்த உணவுகளை படைக்கின்றனர். இருபத்தி ஒன்றாம் நாளில் இதுவரை படைத்த அனைத்து உணவுகளையும் ஒரு சேர படைக்கின்றனர். அந்நாளில், விநாயகருக்கு தீபாராதனை முடிந்தவுடன், ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் தீயுடன் கூடிய மாவிளக்கை உண்கின்றனர். இந்த வழிபாடு வேறெங்கும் காணமுடியாத தனித்துவமாக விளங்குகிறது. இதனை திரிப்பழம் உண்ணுதல் என்கின்றனர்.

ஜி.ராகவேந்திரன்

The post வாழ்வின் மாற்றத்தை ஏற்படுத்தும் மாவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: