மதிப்புக்கூட்டல் : காளானில் பிஸ்கட், ஊறுகாய், சூப் பவுடர்

எந்த ஒரு பொருளையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் பன்மடங்கு லாபம் பெறலாம் என்பதை பலர் நிரூபித்து வருகிறார்கள். அந்த வரிசையில் காளான் வளர்ப்புதொழிலில் மதிப்புக்கூட்டி லாபம் பார்த்து வருகிறார் கடலூர் மாவட்டம் கல்குணம் கிராமத்தை சேர்ந்த கெளரி ராசு. வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் அவதரித்த மருதூரை அடுத்த கல்குணத்தில் காளாண் குடில் அமைத்து, பால் காளான், சிப்பிக்காளானை உற்பத்தி செய்து வருகின்றார் கெளரி ராசு. நேரடியாக விற்பனை செய்வதோடு, பிஸ்கட், ஊறுகாய், சூப் மிக்ஸ் பவுடர் என மதிப்புக்கூட்டிய பொருட்களாகவும் விற்பனை செய்கிறார். அந்திப் பொழுதில் பிபி கவரில் ஈர வைக்கோலை வைத்து காளான் படுக்கை தயார் செய்துகொண்டிருந்தபோது, கெளரி ராசுவை சந்தித்தோம்…

‘‘நானும், என் கணவர் ராசுவும் எம்பிஏ படித்திருக்கிறோம். திருமணத்திற்கு பிறகு இருவரும் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தோம். அங்கு காளானில் பல வெரைட்டிகளில் உணவு செய்வார்கள். பல வகையான பாக்கெட்டில் அடைக்கபட்ட உணவுகள் அங்கு பிரபலம். மக்கள் அவற்றை விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். புரோட்டீன், விட்டமின் நிறைந்த காளானின் மகத்துவம் அங்குள்ள மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதை நாங்களும் உணர்ந்தோம். நம்ம ஊரிலும் இதுபோல் மதிப்புக்கூட்டப்பட்ட காளான் பொருட்களை செய்யலாமே என முடிவெடுத்து 2017ம் ஆண்டில் எங்கள் கிராமத்தில் காளான் குடிலை துவக்கினோம்.

இந்தியாவில் வைக்கோல் காளான், பட்டன் காளான், சிப்பிக்காளான், பால் காளான் வகைகள் பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது. இதில் தென்னிந்தியாவில் வைக்கோல் காளான் வளர்க்கப்படுவது குறைவு. இந்த காளான் ஒரே நாளில் விற்றுத்தீர்ந்துவிட வேண்டும். மறுநாள் வைத்து விற்பனைச் செய்ய முடியாது. வட இந்தியாவில் இதை விரும்பி வாங்குகிறார்கள். நம்மூரில் குறைவே. அதேபோல பட்டன் காளானை ஏசியில் வைத்து வளர்க்க வேண்டும் என்பதால் அதையும் குறைவாகவே தயார் செய்கிறார்கள்.

எங்கள் பண்ணையில் சிப்பிக்காளான் மற்றும் பால் காளானை உற்பத்தி செய்கிறோம். இதை முழுக்கவே இயற்கை முறையிலேயே உற்பத்தி செய்கிறோம்.”காளானில் ஊறுகாய், பிஸ்கட், சூப் மிக்ஸ் பவுடர் போன்ற மதிப்பு கூட்டல் பொருட்களை உற்பத்தி செய்து சுற்று பகுதி விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்கின்றார். ‘காளானில் இப்படியெல்லம் செய்து லாபம் பார்க்கலாமா..? என விவசாயிகளுக்கு புது ஐடியாவை தந்துள்ளார். தாங்கள் காளான் பண்ணை அமைத்த கதையைக் கூறிய கௌரி ராசு, காளான் வளர்ப்பு முறை, மார்க்கெட்டிங் குறித்து தொடர்ந்து பேசினார்.

“விவசாயிகளிடமே வைக்கோலை வாங்கி சுத்தமான தண்ணீரில் 4 மணி நேரம் ஊறவைப்போம். பின்பு வைக்கோலை குறைந்த சூட்டில் வேக வைத்து உலர வைப்போம். பிறகு 60 சதவீதம் ஈரப்பதத்தோடு, காளான் படுக்கையை தயார் செய்து. 12க்கு 24 அளவுள்ள பிபி கவரில் ஒரு அடுக்கு காளான் விதை, ஒரு அடுக்கு வைக்கோல் என இரண்டையும் ஐந்து, ஐந்து லேயர்களாக அமைப்போம். பின்னர் அந்த பையை காளான் பண்ணை குடிலில் உறி அமைத்து தொங்க விடுவோம். காளான் குடிலில் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும், 75 சதவீதம் ஈரப்பதத்திலும் எப்போதும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதத்தை தக்க வைப்பதற்காக காளான் குடிலில் மேற்கூரையில் பைப் அமைத்து தண்ணீர் சொட்ட வைக்கிறோம். குடிலில் காளான் படுக்கையை 17 நாட்களுக்கு தொற்று ஏதும் ஏற்படாமல் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு சிப்பிக்காளான் முளைத்து மெல்ல வெளியே வரும். அதை அறுவடை செய்து விற்பனை செய்வோம்.

அறுவடை செய்த காளானை புதுச்சேரி, கடலூர், விருத்தாசலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்புகிறோம். கிலோ ₹ 200 என்ற விலையில் விற்பனை செய்கிறோம். ஒரு மாதத்தில் எப்படியும் 210 கிலோ காளானை விற்பனை செய்வோம். இதன்மூலம் ₹42 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் ₹15 ஆயிரம் செலவாகும். அதுபோக மாதத்திற்கு ₹27 ஆயிரம் லாபமாக கிடைக்கும். சிங்கப்பூரில் காளான் சார்ந்த பொருட்கள் அதிகம். காளானை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய வேண்டும் என அப்போதே முடிவு செய்தேன். தஞ்சாவூர் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அதை வைத்து காளானைக்கொண்டு ஊறுகாய், பிஸ்கட், சூப் மிக்ஸ் பவுடர் ஆகியவற்றை தயார் செய்து விற்பனை செய்கிறேன். இதன்மூலம் ஒரு தொகை கூடுதல் வருமானமாக கிடைக்கிறது. கோதுமையில் பட்டர், ஏலக்காய் பொடி கலந்து தயாரிக்கப்படும் இந்த பிஸ்கட்டுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் கூடுதலாக சிறுதானியம், நவதானியங்களை சேர்ப்பதால் சுவையான, ஆரோக்கியம் மிகுந்த பிஸ்கட்டாக கொடுக்க முடிகிறது.

இந்த பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை இந்தியா முழுக்க நடைபெறும் தொழில்முனைவோர் கண்காட்சியில் காட்சிப்படுத்துகிறோம். என்னைப்போன்ற பெண்கள், தொழில்முனைவோருக்கு இதை பயிற்சியாக அளிக்கிறோம். எதிர்காலத்தில் காளானில் செய்யப்படும் பல வகையான பொருட்கள் பிஸ்கட், ஊறுகாய் உள்ளிட்டவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்” என நம்பிக்கை தருகிறார்.

The post மதிப்புக்கூட்டல் : காளானில் பிஸ்கட், ஊறுகாய், சூப் பவுடர் appeared first on Dinakaran.

Related Stories: