வாச்சாத்தி வழக்கில் வன அதிகாரி சரண்: வேலூர் சிறையில் அடைப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி வழக்கில் 6 வாரங்களில் சரண் அடையும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, ஐஎப்எஸ் வன அதிகாரி தர்மபுரி கோர்ட்டில் நேற்று மாலை சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் வாச்சாத்தி கிராம பகுதியில், கடந்த 1992 ஜூன் 20ம் தேதி, சந்தனமரம் வெட்டிக் கடத்தல் தொடர்பாக 90 பெண்கள் உள்பட 133 பேர் கைது செய்யப்பட்டனர். சோதனை நடவடிக்கையின் போது, கிராம மக்கள் மீது கடும்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 18 மலைவாழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், வீடுகள் சூறையாடப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், 2011ம் செப்டம்பர் 29ம் தேதி அளித்த தீர்ப்பில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தும், தர்மபுரி நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், வாச்சாத்தி பாலியல் வன்முறை வழக்கில், முதல் குற்றவாளி என்று ஐகோர்ட் தண்டனை விதித்திருந்த ஐஎப்எஸ் அதிகாரிகள் நாதன், பாலாஜி ஆகியோர், தண்டனையை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அதனை தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஐஎப்எஸ் அதிகாரி நாதன் மற்றும் பாலாஜி ஆகியோர், அடுத்த 6 வாரங்களுக்குள் தர்மபுரி மாவட்ட கோர்ட்டில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, வாச்சாத்தி சம்பவம் நடந்த நேரத்தில், அரூர் முதன்மை வனக்காப்பாளராக பணியாற்றிய ஐஎப்எஸ் அதிகாரி பாலாஜி (66), நேற்று மாலை தர்மபுரி மாவட்ட முதன்மை கோர்ட்டில் நீதிபதி (பொ) மோனிகா முன்னிலையில் சரணடைந்தார். இவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வன அதிகாரி பாலாஜியை, போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

The post வாச்சாத்தி வழக்கில் வன அதிகாரி சரண்: வேலூர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: