இந்திய விமான நிலையத்தில் 496 காலி பணியிடங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்: அதிகாரிகள் வேண்டுகோள்

சென்னை:விமான போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக ஏடிசி எனப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாடான ஏர் டிராபிக் கண்ட்ரோல் அமைப்பு உள்ளது. சர்வதேச அளவில் ஏர் டிராபிக் கண்ட்ரோல் தொடங்கப்பட்ட அக்டோபர் 20ம் தேதி உலக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதேபோல் சென்னை விமான நிலையத்தில், ஏர் டிராபிக் கண்ட்ரோல் அறையில், உலக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதையொட்டி ஏர் டிராபிக் கண்ட்ரோல் அதிகாரிகள் கூறியதாவது:

விமான நிலையங்களில் விமான கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் சுழற்சி முறையில், 24 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றி, ஒவ்வொரு விமானத்தையும் பாதுகாப்பாக புறப்படுதல், தரையிறங்குதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். ஏடிசி எனப்படும் இந்த விமான கட்டுப்பாட்டு அறையில், கிரவுண்ட் கண்ட்ரோல் எனப்படும் தரைதள கட்டுப்பாடு, விமானங்கள் பறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் கிளியரன்ஸ் டெலிவரி, புறப்படும், வந்து இறங்கும் விமானங்களை கண்காணிக்கும் டவர் கண்ட்ரோல் எனப்படும் கோபுர கட்டுப்பாடு, வானில் பறந்து கொண்டிருக்கும் விமானங்களை துல்லியமாக கண்காணித்து சீதோசன நிலைக்கு தகுந்தாற்போல் விமானிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பது உள்ளிட்ட பலதரப்பு பணிகளை இந்த ஏர் டிராபிக் கட்டுப்பாட்டு அறை செய்து வருகிறது.

இங்கு பணிகளில் சேர்வதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான படித்த இளைஞர்களை, தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து வருகிறது. ஆங்கில அறிவு கண்டிப்பாக தேவை. எழுத்து தேர்வு அகில இந்திய அளவில் எழுத வேண்டும். பெண்களுக்கும் மற்றும் ஒரு சில வகுப்பினருக்கும் விண்ணப்ப கட்டணங்கள் கிடையாது. சென்னை விமான நிலையத்தில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறையில் சுமார் 320 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

அவர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் அனைவரும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள். இந்த ஆண்டு விமான நிலையங்களில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைகளுக்கு புதிதாக 496 பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் இணையதளம் மூலம் தொடங்க இருக்கிறது. https//www.aai.aero/en/careers/recruitment என்ற வலைதளத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் மாணவ, மாணவிகள் இப்பணிக்கு விண்ணப்பித்து, அதிகமானோர் இந்த வேலைக்கு வரவேண்டும் என்றனர்.

The post இந்திய விமான நிலையத்தில் 496 காலி பணியிடங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்: அதிகாரிகள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: