வி.ஐ.டி. பல்கலைக்கழக தின விழா கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் உங்களை அடையும்: ஐகோர்ட் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் பேச்சு

சென்னை: வி.ஐ.டி. பல்கலைக்கழக தின விழா மற்றும் விளையாட்டு தின விழா நேற்று நடந்தது. வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இணை துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் வரவேற்று திட்ட செயலாக்க அறிக்கை வாசித்தார். பல்கலை துணைத்தலைவர்கள் சேகர் விஸ்வநாதன், சங்கர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் கலந்துகொண்டு பல்கலைக்கழக தேர்வுகள், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கோப்பை, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.

முன்னதாக, வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் பேசுகையில், ‘‘வி.ஐ.டி. சிறந்த கல்வியாளர்களை மட்டும் உருவாக்குவதில் கவனம் செலுத்துவதில்லை. சிறந்த குடிமகன்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறது. கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ஒன்றிய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். சுகாதாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தி துறையில் சீனா 30 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. ஆனால், இந்தியா 3 சதவீத பங்களிப்பையே வழங்குகிறது. ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு நாட்டின் ஒட்டு மொத்த ஜி.டி.பியில் 1 சதவீதமும், சுகாதாரத்திற்கு ஒன்றரை சதவீதமும் ஒதுக்கப்படுகிறது.

இவற்றை அதிகரிப்பதன் மூலம் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை இந்தியா எட்ட முடியும்’’ என்றார். சென்னை ஐகோர்ட் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் பேசும்போது, ‘‘மாணவ, மாணவிகள் தங்களின் எதிர்கால நலனுக்காக பெற்றோர் கூறும் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும். வாழ்வில் நன்கு படித்து நல்ல நிலைக்கு வந்தவுடன் பெற்றோரை கைவிட்டு விடக்கூடாது. அவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. தோல்விகளை கண்டு துவளாமல் அவற்றை வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றி கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் உங்களை அடையும்.

அதற்கு கடவுளை விட பெற்றோரின் ஆசீர்வாமே மிகவும் முக்கியம்’’ என்றார். நிகழ்ச்சியில் பெங்களூரு உபேர் நிறுவன முதுநிலை இயக்குனர் மணிகண்டன், சென்னை நோக்கியா நிறுவன குழுத் தலைவர் மீனாட்சி ஷான் ஆகியோர் பேசினர். பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் உள்ளிட்ட பல்வேறு கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம்பாபு கோடாலி நன்றி கூறினார்.

The post வி.ஐ.டி. பல்கலைக்கழக தின விழா கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் உங்களை அடையும்: ஐகோர்ட் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: