ஒன்றிய பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

சென்னை: சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் ஒன்றிய பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்கள் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: 2024-25ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6,362 கோடி ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் 22 திட்டங்கள் தற்போது செயலாக்கத்தில் உள்ளன. அதில் 33,467 கோடி ரூபாய் செலவில் 2587 கிலோ மீட்டர் புதிய தண்டவாளங்கள் இந்த திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் அதி நவீனமாக மாற்றப்பட உள்ளது. சென்னை கடற்கரை, எழும்பூர், சென்னை பூங்கா, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கிண்டி, பரங்கி மலை உள்ளிட்ட 77 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ராமேஷ்வரம் தனுஷ்கோடி திட்டத்தை கைவிட மாநில அரசு எங்களுக்கு கடிதம் அனுப்பினர். ஒன்றிய அரசு பாகுபாடின்றி செயல்படுகிறது. அறிவித்த திட்டத்தை செயலாக்க முனைப்பு காட்டுகிறோம். கடந்த ஆண்டு 6080 கோடி, இந்த ஆண்டு 6362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, 8000 கோடி வரை ஒதுக்க தயாராக உள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் 5.02 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் இரண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு 1.30 லட்சம் பேர் பணியமர்த்தினோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்திற்கு ஒன்றிய பட்ஜெட்டில் எந்த புதிய அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், பல்வேறு விவசாய சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், வியாபாரிகள், பொதுமக்கள், தொழிற்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு ரயில்வே திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் எல்லாம் அறிவிப்புகளாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு திட்டத்தைக் கூட முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போதும் அறிவிப்புகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

The post ஒன்றிய பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: