சம வாய்ப்பற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய கல்வியாளர்கள் வலியுறுத்தல்

சென்னை: பணக்காரர்கள் மட்டும் கலந்துகொள்ளும் சம வாய்ப்பற்ற நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து ஒன்றிய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களின் பின்னணி குறித்து அணைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் தேசிய அளவில் முதல் 50 இடங்களை பிடித்த மாணவர்களில் 39 பேர் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்களில் 29 பேர் பொது பிரிவை சேர்ந்த உயர்சாதி மாணவர்கள் என்பதும் 8 பேர் மட்டுமே பிற்படுத்தபட்ட வகுப்புகளையும் 2 பட்டியலினத்தவர்கள் என்பதும் தெரியவந்தது. தனியார் பயிற்சி மையங்களில் குறைந்தது இரு ஆண்டுகளாவது படிக்கும் வசதி படைத்த மாணவர்களுக்கும் நகர் புறங்களில் மிக சிறந்த பள்ளிகளில் படிப்பவர்களுக்கும் மட்டுமே நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்பது மீண்டும் ஒரு முறை அம்பலமாகியுள்ளதாக கூறும் கல்வியாளர்கள் நீட் என்ற வணிக சூதாட்டத்தில் பணம் படைத்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்கிறார்கள்.

கிராம புற ஏழை மாணவர்களும் தனிபயிற்சி மையங்களில் சேர முடியாதவர்களும் நீட் தேர்வில் போராடி தேர்ச்சி பெற்றாலும் அதிக மதிப்பெண் பெற முடியாமல் மருத்துவ கனவு சிதைந்து போவதாக கூறும் கல்வியாளர்கள் இப்படி சமமற்ற நிலையில் உள்ளவர்கள் ஒரே மாதிரி நீட் தேர்வை எப்படி எழுத முடியும் என்கிறார்கள். பீகாரின் கோட்டா பகுதியில் 400 மதிப்பெண் பெற்ற மாணவரும், மஹாராஷ்டிராவில் 588 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரும் அரசு மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் போன மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதையும் அவர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

மருத்துவம் படிக்க வருவோர் தகுதி பற்றி பேசும் ஒன்றிய அரசு நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் சமூக பொருளாதார நிலைமை ஒரே மாதிரி உள்ளதா என ஏன் ஆராய மறுக்கிறது என்றும் கேள்வி எழுப்பும் அவர்கள் நீட் தேர்வில் நிலவும் பாரபட்ச நிலை குறித்து ஒன்றிய அரசு உடனே ஒரு குழு அமைத்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மருத்துவ கலந்தாய்வுக்கு சிறப்பு பேருந்து விடப்பட்ட காலம் மாறி நீட் கொண்டுவரப்பட்ட பிறகு கலந்தாய்வில் பங்கேற்க வருவோர் கார்களில் வருவதே இது பணக்காரர்களின் தேர்வு என்பதற்கான குறியீடு என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

வீட்டு பயிற்சியை மட்டும் எடுப்பவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்ற நிலை உருவாகி இருப்பதை உணர்ந்து அனைவர்க்கும் சமமான பிளஸ் 2 மதிப்பெண் மூலமே மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படிப்போருக்கும் கோச்சிங் சென்டர்களில் லட்சக்கணக்கில் பணம் கட்டகூடியோருக்கும், உயர்வகுப்பை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என தலைவர்கள் குற்றம்சாட்டிவரும் நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல்கள் நாடு முழுவதும் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.

The post சம வாய்ப்பற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய கல்வியாளர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: