தூத்துக்குடி துறைமுகம் வழியாக பட்டாணி இறக்குமதியை தொடர வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை

சென்னை: தூத்துக்குடி துறைமுகம் வழியாக பட்டாணி இறக்குமதியை தொடர வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பட்டாணி இறக்குமதியை 1.5 லட்சம் டன்னாக கட்டுப்படுத்தி வெளிநாட்டு வர்த்தக துணை இயக்குநர் கடந்த 2019ம் ஆண்டு டிச.18ம் தேதி வெளியிட்ட பொது அறிவிப்பால் பட்டாணி, மஞ்சள் பட்டாணி, பச்சை பட்டாணி, உள்ளிட்ட இதர பட்டாணி வகைகளின் இறக்குமதி எம்.ஐ.பி.க்கு உட்பட்டதோடு, கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே இறக்குமதி செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களாக செயல்பட்டு வரும் பருப்பு மற்றும் மாவு ஆலைகளும், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; இக்கட்டுப்பாடு பட்டாணி வகைகளின் தேவையை அதிகரித்துள்ளதால், பற்றாக்குறை காரணமாக, தமிழகத்தில் பச்சை பட்டாணியின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் 5.40 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பட்டாணி பயிரிடப்பட்டு ஆண்டுக்கு 54.22 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் பட்டாணியின் சராசரி தேவை சுமார் 2 லட்சம் டன், இதில் 10,000 டன் மட்டுமே வட மாநிலங்களில் இருந்து தருவிக்கப்படுகிறது.

பிற மாநிலங்களில் பட்டாணிக்கு அதிக தேவை இருப்பதால், விலையும் மிகவும் அதிகமாக உள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து பட்டாணி தூத்துக்குடி கடல் துறைமுகம் வழியாக குறைவான விலையில் இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழகத்தின் தென்பகுதிகளில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களாக செயல்பட்டு வரும் பருப்பு மற்றும் மாவு அரைக்கும் தொழில் வணிகத்தின் நலன் கருதி தூத்துக்குடி துறைமுகம் வழியாக பட்டாணி வகைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி துறைமுகம் வழியாக பட்டாணி இறக்குமதியை தொடர வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: