3 நாள் பயணமாக செப்.8ல் அமெரிக்கா செல்கிறார் ராகுல்: பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக வரும் 8ம் தேதி அமெரிக்கா புறப்படுகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளார். இப்பயண விவரங்களை காங்கிரஸ் அயலக தலைவர் சாம் பிட்ரோடா நேற்று வெளியிட்டார். அவர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில்,

‘‘அமெரிக்கா வரும் ராகுல் காந்தி வரும் 8ம் தேதி டல்லாசிலும், 9, 10ம் தேதிகளில் வாஷிங்டனிலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். டல்லாசில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் அவர் உரையாற்ற உள்ளார். பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளனர். அடுத்த நாள் வாஷிங்டனில் சிந்தனையாளர்கள், தேசிய பத்திரிகையாளர்கள் மன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளார். இப்பயணத்தில் ராகுல் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து பேச உள்ளார்’’ என்றார்.

* செப்.4ல் காஷ்மீரில் பிரசாரம்
ஜம்மு காஷ்மீரில் 18ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்கிறார். இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் குலாம் அகமத் மிர் கூறுகையில், ‘‘ராகுல்காந்தி வருகிற 4ம் தேதி ஜம்மு காஷ்மீர் வருகின்றார். தொடர்ந்து துரு மைதானத்திலும், ஜம்முவின் சங்கல்தன் பகுதியிலும் நடக்கும் பிரசாரத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். அடுத்தடுத்த கட்ட தேர்தல் பிரசாரத்திலும் ராகுல்காந்தி கலந்து கொள்வார்” என்றார்.

The post 3 நாள் பயணமாக செப்.8ல் அமெரிக்கா செல்கிறார் ராகுல்: பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: