சென்னையில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தவிர்க்க நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் தீவிரம்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னையில் பெரும் பொருட்செலவில், நடைபாதை நடப்பதற்கே என்ற அடிப்படையில் பாதசாரிகளுக்காக நடைபாதைகள் அனைத்து முக்கிய சாலைகளிலும் அமைக்கப்பட்டன. ஆனாலும், பெரும்பாலான இடங்களில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்குவதால் அதை தேடி பிடிக்க வேண்டிய நிலை இருப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக சிறு சிறு டீ கடைகள் தொடங்கி நிரந்தர கடைகள், வீடுகள், குடிகள் என்று பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் பாதசாரிகள் நடைபாதைகளில் செல்ல முடியாமல் சாலைகளில் நடந்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி செல்லும் போது வாகன விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே, சென்னை போன்ற நகர் பகுதிகளில் நடைபாதை மக்களுக்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்த சென்னை மாநகராட்சி ‘நடைபாதை நடப்பதற்கே’ என்ற முழக்கத்தோடு ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதைகளை விரிவுபடுத்தியது. அதன்படி சென்னையில் நடைபாதையை அழகுப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்தி கோடிக்கணக்கில் நிதியும் ஒதுக்கீடு செய்தனர். அதன் அடிபபடையில் நடைபாதைகளை விரிவுபடுத்தும் பணிகள் சென்னை முழுவதும் நடைபெற்றது. அவற்றை அழகுபடுத்தும் வகையில் வழுவழுப்பான கற்களும் அதில் பதிக்கப்பட்டன. அப்போது, நடைபாதை நடப்பதற்கே என்ற அறிவிப்பு பலகைகளும் ஆங்காங்கே மாநகராட்சியால் வைக்கப்பட்டன. ஆனாலும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் தொடர் கதையாகி வருவதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுவதும் அடிக்கடி நிகழும் சம்பவங்களாகி விட்டன. சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில், உலகத் தரத்திலான நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இவைகளில் நடைபாதைகளில் தங்கள் வாகனங்களை நிறுத்துவது, கடைகள் அமைப்பது, தங்களுக்கு ஏற்றபடி அதை மாற்றிக் கொள்வது என ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. இது வாகன ஓட்டிகளை பாதிப்பதோடு, பல இடங்களில் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்துகிறது. பிரதான சாலைகளில் மட்டுமல்ல, உள்புறச் சாலைகளிலும் இதே நிலை தான் தொடர்கிறது. ஏதோ பிழைப்புக்காக கடைகள் வைத்தால் கூட பரவாயில்லை, வீடுகளில் நிறுத்தப்பட வேண்டிய கார், மோட்டார் சைக்கிள்களை நடைபாதையில் நிறுத்துவதால் அந்த தெருக்களுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, சென்னையில் பெரும்பாலான நடைபாதைகளில், கார், பைக்குகள் தான் அலங்கரித்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ஏராளமான நிதிகள் ஒதுக்கப்பட்டு, சர்வதேச தரத்தில் சென்னை முழுவதும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் அழகுபடுத்தப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படுவதால் அதன் அழகும் போய், இருந்த இடம் கூட தெரியாமல் சிதிலமடைந்து விடுகிறது. எனவே, இதுபோன்ற ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நடைபாதைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை சமூக ஆர்வலர்கள் முன் வைத்த வண்ணம் உள்ளனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,‘‘ நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு பொதுமக்கள் சாலையில் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நடைபாதை ஆக்கிரமிப்புகளை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுத்தாக வேண்டும். சிலர் தங்கள் கடையின் முகப்பை நடைபாதை வரை நீட்டி, தங்கள் இடங்கள் போல கருதுகிறார்கள். இதனால் பாதசாரிகள் மெயின் ரோட்டில் நடந்து செல்கிறார்கள். இதேபோன்று வாகனங்களையும், அதன் உரிமையாளர்கள் நடைபாதையில் நிறுத்தி செல்லும் வழக்கமும் கண்டிக்கதக்கது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். எனவே, ஆக்கிரமிப்பால் காணாமல் போன நடைபாதைகளை மீட்க வேண்டும். அடிக்கடி அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட வேண்டும்’’ என்றனர். இந்நிலையில் தான் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சி தீவிரமாக களம் இறங்கியுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் நடைபாதைகளில் அமைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், அதிகாரிகளை அழைத்து சென்று ஆக்கிரமிப்புகளை கண்டுபிடித்து அதை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தார். முதல் கட்டமாக நேற்று பெசன்ட் நகரில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

The post சென்னையில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தவிர்க்க நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் தீவிரம்: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: