தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு

திருவொற்றியூர்: 43வது தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டியில் தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. ரயில் மூலம் தமிழகம் திரும்பும் அணியினருக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று சிறப்பு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. ஹரியானா மாநிலம் ரோடக் நகரில் நடைபெற்ற 43வது தேசிய சப் ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டியில் கலந்துகொண்ட தமிழக அணி பெரும்பாலான போட்டிகளில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.

இதுகுறித்து தமிழக மாநில பூப்பந்தாட்ட கழக தலைவர் வி.எழிலரசன் கூறுகையில், 43வது தேசிய சப் ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டியில் திருவொற்றியூர்,எண்ணூர், மாதவரம் பகுதியை உள்ளடக்கி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஆண்கள், பெண்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போட்டியில் 28 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 56 அணிகள் பங்கேற்றன. இதில் தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட கழக சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பிற மாநில அணிகளை வென்று, இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதில்,இரட்டையர் பிரிவில் சிறுமியர் தமிழக அணி ராஜஸ்தான் மாநிலத்தை வென்றது. இரட்டையர் பிரிவில் தமிழக சிறுவர் அணி கேரள மாநிலத்தை வென்றது.

கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழக அணியும், ஆந்திர மாநிலமும் கூட்டாக வெற்றியை பெற்றுள்ளது. ஐவர் பிரிவில் தமிழக சிறுமியர் அணி ஆந்திர மாநிலத்தை வென்றுள்ளது.ஐவர் பிரிவில் ஆந்திர மாநில சிறுவர் அணி தமிழக அணியை வென்றுள்ளது. இவ்வாறு இறுதி போட்டியில் தமிழக பூபந்தாட்ட அணி மொத்தமுள்ள 5 பிரிவுகளில் 4 தங்க பதக்கங்களையும், ஒரு வெள்ளி பதக்கத்தையும் வென்று சாதனை புரிந்துள்ளது. தமிழக அணியினர் ரயில் மூலம் நாளை (இன்று) காலை தமிழகம் திரும்புகின்றனர். இவர்களுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழக பூப்பந்தாட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது என்றார்.

The post தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: