4 ஆயிரம் பொம்மைகளுடன் நவராத்திரி கொலு கண்காட்சி

பெரம்பூர்: கொளத்தூர் நவராத்திரி கோயிலில் 4 ஆயிரம் பொம்மைகளுடன் நவராத்திரி கொலு கன்காட்சி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வீடு மற்றும் கோயில்களில் விதவிதமான பொம்மைகளை வைத்து கொலு கண்காட்சி நடத்துவது வழக்கம். அந்த வகையில் கொளத்தூர் ஜி.கே.எம். காலனி 36வது தெருவில் உள்ள நவராத்திரி கோயிலில் ஆண்டுதோறும் எண்ணற்ற பொம்மைகளை வைத்து கொலு கண்காட்சி நடத்துவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு 10வது ஆண்டாக நவராத்திரி கொலு கண்காட்சி திருவிழா நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. லட்சுமி, சக்தி, சரஸ்வதி ஆகிய 3 தேவிகளும் ஒரே கருவறையில் இருப்பது கோயிலில் சிறப்பு. இங்கு நவராத்திரி கொலுவை முன்னிட்டு 4,000க்கும் மேற்பட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. கடவுள்களின் உருவங்கள், தமிழர்களின் கலாச்சாரம், ஆன்மிகத்தின் மகத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பறைசாற்றும் விதத்தில் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சரவணப் பொய்கை முருகன் நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையில் கார்த்திகை பெண்கள் சுற்றி இருப்பது போலவும் சிவன் நெற்றியில் இருந்து தண்ணீர் வருவது போல பல்வேறு காட்சிகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி திருவிழாக்களின் போது இதுபோன்ற கொலு கண்காட்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வந்து நமது முந்தைய கலாச்சாரம், ஆன்மிகம் குறித்த நிகழ்வுகள் மற்றும் வரலாற்று சுவடுகளை வருங்கால சந்ததியினருக்கு பெற்றோர்கள் கற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுதோறும் பிரமாண்டமான கொலு கண்காட்சியை நடத்துவதாகவும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கொலு கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்தி வரும் கஜேந்திரன் தெரிவித்தார்.

The post 4 ஆயிரம் பொம்மைகளுடன் நவராத்திரி கொலு கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: