திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட 5 திருக்கோயில்களில் பௌர்ணமி தின 108 திருவிளக்கு வழிபாடு: அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் 5 திருக்கோயில்களில் பௌர்ணமி தின 108 திருவிளக்கு வழிபாட்டினை தொடங்கி வைத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று (05.05.2023) திருவொற்றியூர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் 108 திருவிளக்கு வழிபாட்டினை தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி, 2022-2023 ஆம் ஆண்டில் மாதந்தோறும் பௌர்ணமி நாளான்று 12 திருக்கோயில்களில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும் என அறிவித்து குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களோடு இணைந்து தொடங்கி வைத்தோம். அந்த 12 திருக்கோயில்களுக்கும் மாதந்தோறும் தவறாமல் பௌர்ணமி தினத்தில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு இன்று 12 வது திருவிளக்கு வழிபாடு நடைபெற்றிருக்கின்றது. அதனை தொடர்ந்து, இந்த நிதியாண்டில் மேலும் 5 திருக்கோயில்களில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும் என அறிவித்து திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோயில், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டீசுவரம் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், படைவீடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களில் இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்தோடு சேர்த்து திருவிளக்கு வழிபாடுகளில் 16,092 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்து இருக்கிறார்கள். சட்டப்பேரவையின் அறிவிப்பானது சட்டமன்றம் முடிந்து ஒரு மாதத்திற்குள்ளாக செயல்படுத்துவது தான் திராவிட மாடல் ஆட்சியினுடைய லட்சிய பயணமாகும். பாஜக தலைவர் அவர்கள் அரைகுறை தகவல்களோடு ட்விட்டரில் பதிவிடுகின்றார். ரூ.10 லட்சத்திற்கும் மேலாக வருமானம் வருகின்ற திருக்கோயில்களில் 12% நிர்வாக வசதிக்காக துறைக்கு அளிக்கப்படுகிறது. அந்த நிதியிலிருந்து சம்பளம் போன்ற பணிகளுக்காக மீண்டும் அரசிடம் இருந்து நிர்வாக செலவாக திரும்பப்பெற்று திருக்கோயிலுக்கு செலவிட்டு கொண்டிருக்கின்றோம்.

திருக்கோயில்களுக்கு உண்டான செலவினங்களுக்கு திருக்கோயிலின் சார்பிலே வருகின்ற நிதி ஆதாரத்தோடு மட்டுமல்லாமல் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு சுமார் ரூ.600 கோடிக்கு மேல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசின் மானியமாக வழங்கி இருக்கின்றார். ஒரு கால பூஜை திட்டத்திற்கு 2021 – 2022 ஆம் ஆண்டு ரூ.129 கோடியே 50 லட்சமும், கடந்தாண்டு புதிதாக 2,000 திருக்கோயில்களை ஒருகால பூஜை திட்டத்தில் சேர்க்க ரூ.40 கோடியும் இந்தாண்டு 2,000 திருக்கோயில்களை சேர்த்திட ரூ.40 கோடியும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

கன்னியாகுமாரி தேவஸ்தான திருக்கோயில்களுக்கு அரசு மானியத்தை கடந்தாண்டு ரூ.6 கோடியாக உயர்த்தி இந்தாண்டு ரூ.8 கோடி ஆகியிருக்கின்றார். புதுக்கோட்டை தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருக்கோயில்களுக்கு அரசு மானியம் ரூ.3 கோடியை ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கின்றார். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருக்கோயில்களின் பராமரிப்பு செலவிற்கு ரூ.3 கோடி முதன்முறையாக மானியமாக வழங்கி இருக்கின்றார். 1,000 ஆண்டு மேற்பட்ட திருக்கோயில்களின் திருப்பணிகளை மேற்கொள்ள கடந்தாண்டில் ரூ.100 கோடியும், நடப்பாண்டில் ரூ.100 கோடியும் ஒதுக்கீடு செய்து வழங்கி திருக்கோயிலில் திருவிளக்கு ஒளி வீசுவதற்கு காரணமாக இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் வரலாற்றிலே இல்லாத அளவிற்கு தேர்தலை மையப்படுத்தி கர்நாடகா மாநிலத்தில் நாங்கள் திருக்கோயிலுக்கு திருப்பணி செய்வதற்கு 1,000 கோடி செலவிடுவோம் என்று சொல்லுகின்ற நிலை வாக்குகளை எதிர்நோக்கி இருக்கின்ற நிலை. ஆனால் தற்போது தேர்தல், வாக்கு வங்கி என்று எதையும் காண வேண்டிய சூழ்நிலை இல்லாத இந்த கட்டத்தில் பக்தர்களும் திருக்கோயில் திருப்பணிகளும் மேலோங்க வேண்டும் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரையில் ரூ.600 கோடிக்கும் மேலாக திருப்பணிகளுக்கு அரசு மானியமாக வழங்கிய ஒரே ஆட்சி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இருக்கின்ற திராவிட மாடல் ஆட்சி என்று கூறியுள்ளனர்.

திருக்கோயில்களை அரசிடம் இருந்து விடுவித்தால் இந்தக் கோயில்கள் எல்லாம் யாரிடம் ஒப்படைப்பார்கள் தனியாரிடம் எப்படி கோயில்களை ஒப்படைக்க முடியும். மன்னர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட, பல செல்வந்தர்கள் கோயில்களின் திருப்பணிகளுக்காக அவர்களுடைய சொத்துக்களை எழுதி வைத்த சொத்துக்களை எப்படி தனியாரிடம் ஒப்படைக்க முடியும். துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பராமரிப்பில் இருந்தால் தான் ஒரு கட்டுப்பாட்டில் இருக்கும் தவறுகள் நடைபெறாமல் இருக்கும். எங்களை பொறுத்தளவில் வெளிப்படையான ஆட்சி நடத்துகின்றோம். தவறுகள், குறைகள் என்று எதைச் சுட்டிக்காட்டினாலும் குறைகள் என்றால் அதை நிவர்த்தி செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

ஆளுநர் மாளிகையை இன்றைக்கு அரசியல் மாளிகையாக மாற்றி விட்ட பெருமை முதன்முதலில் தற்போதைய தமிழக ஆளுநரை சாரும். எப்படி எந்த வகையில் என்ன குற்றச்சாட்டுகள் வந்தாலும் இந்த ஆட்சியை பொறுத்த அளவில் நேர்வழியில் சென்று கொண்டிருக்கின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் சாதாரணமானவர் அல்ல, இவர் ஒரு இரும்பு மனிதர். எத்தனை பெரிய சவால்களையும் சமாளிக்க கூடிய ஆற்றல் வாய்ந்த முதல்வராக இன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் திகழ்கின்றார். இது போன்ற ஏச்சுக்கள், பேச்சுக்களால் தமிழகத்தின் வளர்ச்சியை எந்த அளவிலும் தடுத்து விட முடியாது. தமிழகத்தின் அரசியல் பாதையை இப்படிப்பட்ட எத்தர்களால் புனையப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு செவி மடுக்காமல் வளர்ச்சியை நோக்கி செல்வது தான் திராவிட மாடல் ஆட்சியாகும். இந்த ஆட்சியை தொட்டுப் பார்க்கவோ அசைத்துப் பார்க்கவோ ஆட்டிப் பார்க்கவோ எந்த சக்தியாலும் முடியாது.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், ஆணையர் க.வீ.முரளீதரன், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, திருக்கோயில் உதவி ஆணையர், செயல் அலுவலர் எம். பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

The post திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட 5 திருக்கோயில்களில் பௌர்ணமி தின 108 திருவிளக்கு வழிபாடு: அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள் appeared first on Dinakaran.

Related Stories: