திருவாரூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் 3 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் பயன்

*சிறந்த மருத்துவர், செவிலியர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் கடந்த 3 வருட காலமாக 4 லட்சம் பேர் பயனடைந்து வருவதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு இருந்து வரும் மருத்துவகுறைபாடுகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப சிகிச்சை பெறும் வகையில் வரும்முன் காப்போம் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இத்திட்டம் தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதால் லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களுக்கான மருத்துவ குறைபாடுகளை முன்கூட்டியே அறிந்துகொண்டு அதற்கு ஏற்ப சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இந்த திட்டத்திற்கும் ஒரு படி மேலாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ந் தேதி துவக்கி வைத்தார்.

மாநிலம் முழுவதும் இந்த திட்டமானது முழு அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொது மக்களின் வீடுகளுக்கே மருத்துவ பணியாளர்கள் நேரில் சென்று அவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டு சிகிச்சைக்கான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி ஏற்கனவே இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சைகளை பெற்று வருபவர்களுக்கும் அவர்களது வீடுகளிலேயே மருந்து மாத்திரைகளை வழங்கியும் வருகின்றனர்.

இதுமட்டுமின்றி கை, கால் செயல் இல்லாதவர்களுக்கு இயன் முறை மருத்துவம் என்ற பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்ப வாய் புற்றுநோய் ஆகியவையும் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சைகளை பெறுவதற்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி சிறுநீரக கோளாறுகள் இருப்பவர்களுக்கும் அதற்கான மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், நன்னிலம் மற்றும் கொரடாச்சேரி என 10 ஒன்றியங்களிலும் இந்த திட்டத்தின் கீழ் செவிலியர்கள் மற்றும் பிசியோதெரபிகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் சிகிச்சைக்கான மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த திட்டமானது நேற்று முதல் 4வது ஆண்டை துவங்கியுள்ள நிலையில் இதில் பணியாற்றி வரும் மருத்துவர் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு விழா கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்தார். எம.எல்ஏ பூண்டிகலைவாணன் முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பேசுகையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 வருட காலத்தில் மொத்தம் 13 லட்சம் பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இதில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் என மொத்தம் 3 லட்சத்து 98 ஆயிரத்து 148 பேர் பயனடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சியில் சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் ஹேமசந்த் காந்தி, நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் 3 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் பயன் appeared first on Dinakaran.

Related Stories: