திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்துக்கு 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால்நடை மருத்துவ ஊர்த்திகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும். ஒரு லட்சம் கால்நடைகளுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையினை கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் துவக்கிவைத்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் துவக்கிவைத்தனர்.கலெக்டர் சாருஸ்ரீ கூறியதாவது:
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்திடுவதிலும், கிராம மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும், மேம்பட்ட தரமான மருத்துவசிகிச்சை கால்நடைகளுக்கு அளிக்கவும், 2ம் வெண்மை புரட்சியை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது கால்நடை மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் இப்பணிகளை மேற்கொள்வதற்காக 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு துவக்கிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நன்னிலம் மற்றும் திருவாரூர் ஒன்றியப் பகுதிகளில் சேவையாற்ற நன்னிலத்தை கால்நடை மருத்துவமனையை தலைமையிடமாக கொண்டு சிகிச்சை ஊர்தி செயல்பட உள்ளது.
குடவாசல் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியப்பகுதிகளில் உள்ள கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் விதமாக கொரடாச்சேரி கால்நடை மருத்துவமனையை தலைமையிடமாக கொண்டு வாகனம் செயல்படும். நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் ஒன்றியங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊர்தி எடமேலையூர் கால்நடை மருத்துவமனையை தலைமையிடமாக கொண்டு இயங்கும். மன்னார்குடி மற்றும் கோட்டூர் ஒன்றியங்களுக்கு வாகனம் மன்னார்குடி கால்நடை மருத்துவமனையை தலைமையிடமாக கொண்டு செயல்படும்.
திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை ஒன்றியங்களுக்கான சிகிச்சை வாகனம் திருத்துறைப்பூண்டி கால்நடை மருத்துவமனையை தலைமையிடமாக கொண்டு இயங்கும். இந்த கால்நடை மருத்துவ வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர், ஒரு ஓட்டுநர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த மருத்துவ வாகனங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சைப் பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகளை மேற்கொள்ளவும், பிற்பகலில் கால்சென்டர் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகளை மேற்கொள்ளவும் உள்ளது.
இந்த கால்நடை மருத்துவ வாகனங்கள், கால்நடை சிகிச்சை முகாம்கள், கால்நடை தடுப்பூசி முகாம்கள், கால்நடை பராமரிப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு முகாம்களிலும் செயல்படுத்தப்படும். ஒரு லட்சம் கால்நடை எண்ணிக்கை அலகுகள் கொண்ட பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற இலக்கினை கொண்டு, கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் கால்நடை சிகிச்சைக்கு தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள் உயிர் காக்கும் மருந்துகள், சிறிய ஆய்வுக்கூடம், தடுப்பூசிகளுக்கான குளிர்சாதனப்பெட்டி போன்ற வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, திருவாரூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை அனைத்து கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சையளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சியில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் அமீதுஅலி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post திருவாரூர் மாவட்டத்தில் 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் appeared first on Dinakaran.