திருப்பத்தூர் அருகே கோயில் விழாவில் பரபரப்பு அனுமதியின்றி அமைத்த 100 அடி உயர ராட்சத ராட்டினம் திடீரென சரிந்தது

* 80 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்

* விஏஓ புகாரால் ராட்டின உரிமையாளர் கைது

திருப்பத்தூ : திருப்பத்தூர் அருகே திருவிழாவில் அனுமதியின்றி அமைத்த 100 அடி உயர ராட்சத ராட்டினம் திடீரென சரிந்தது. இதில் சிக்கிய 80 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும், ராட்டிண உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.திருப்பத்தூர் அடுத்த பசலிக்குட்டை கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 18ம் நாள் திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இதில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அங்குள்ள சுனையில் புனிதநீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

இதேபோன்று நேற்று முன்தினம் ஆடி 18ம் நாள் திருவிழாவையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை முதல் பல்வேறு பகுதிககளை சேர்ந்த சுமார் 1 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் பலர் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருவிழாவையொட்டி அங்குள்ள மைதானத்தில் சிறுவர்களை கவரும் வகையில் ராட்சத ராட்டினங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தற்காலிக உணவுக்கூடங்கள் அமைத்திருந்தனர்.

இவற்றில் சுமார் 100 அடி உயர ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் உற்சாகமாக விளையாடினர். இரவு 10.30 மணியளவில் ராட்டிணம் திடீரென பக்கவாட்டில் சரிந்து நின்றது. அப்போது ராட்டினத்தில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். அதேபோன்று தங்கள் பிள்ளைகளை ராட்டிணத்தில் ஏற்றிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெற்றோர் மற்றும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்து அலறினர். திருவிழாவுக்கு வந்த பலர், ராட்டிணம் விழுந்துவிடுமோ என அஞ்சி நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து உடனடியாக ராட்டிணம் நிறுத்தப்பட்டது.

இதனால் விழாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், போலீசார் உள்ளிட்டோர் பொதுமக்கள் உதவியுடன் ராட்டினத்தில் சிக்கியிருந்த பெண்கள், சிறுவர்கள் உட்பட 80 பேரை நள்ளிரவு 12 மணி வரை போராடி பத்திரமாக மீட்டு கீழே இறக்கப்பட்டனர். ராட்டினம் முழுமையாக சாய்ந்திருந்தால் அதிலிருந்தவர்கள் மட்டுமின்றி அருகில் கூட்டமாக இருந்தவர்களும் சிக்கி உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

இந்நிலையில் போலீசார் விசாரணையில் இந்த ராட்டிணம் அமைக்க உரிய அனுமதி பெறவில்லையாம். இதையடுத்து போலீசார் உடனடியாக அங்கிருந்த மற்ற சாகச நிகழ்ச்சிகளை நிறுத்தினர். இதுகுறித்து ராச்சமங்கலம் விஏஓ சிவக்குமார் கொடுத்த புகாரின்பேரில் ராட்டினத்தை அனுமதியின்றி அமைத்த வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டை சேர்ந்த சிவலிங்கம்(61) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post திருப்பத்தூர் அருகே கோயில் விழாவில் பரபரப்பு அனுமதியின்றி அமைத்த 100 அடி உயர ராட்சத ராட்டினம் திடீரென சரிந்தது appeared first on Dinakaran.

Related Stories: