திருப்பதி பஸ் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட சென்னை குழந்தை 8 மணி நேரத்தில் மீட்பு: திருப்பதி போலீசார் அதிரடி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, பஸ்நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிய சென்னை தம்பதியின் 2 வயது ஆண் குழந்தையை மர்ம நபர் திருடிச்சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சி உதவியுடன் 8 மணிநேரத்தில் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த சந்திரசேகர்- மீனா தம்பதிக்கு 8 வயதில் மோகன் , 2 வயதில் அருள் முருகன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சந்திரசேகர் மனைவி மீனா மற்றும் குழந்தைகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பதி வந்தனர். சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் சென்னை பஸ்கள் நிற்கும் 3வது பிளாட்பாரத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். பஸ்கள் வர தாமதமானதால் அங்கேயே தூங்கியுள்ளனர்.

நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பார்த்தபோது குழந்தை அருள்முருகனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கம் என பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து சந்திரசேகர் திருப்பதி கிழக்கு போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து, கிழக்கு காவல் நிலைய போலீசார் பஸ் நிலைய சுற்றுப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில் மர்ம நபர் குழந்தையை எடுத்து செல்வது தெரிய வந்தது. இதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாக திருப்பதி எஸ்பி பரமேஸ்வர் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருப்பதி அடுத்த ஏர்ப்பேடு காவல் நிலையத்தில் நேற்று காலை பெண் ஒருவர் குழந்தையுடன் வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், தனது பெயர் தனம்மா என்றும் ஏர்ப்பேடு மண்டலம் மாதவமாலா கிராமம் எனவும் தெரிவித்தார். மேலும், நேற்று காலை தனது தம்பி அவிலாலா சுதாகர் ஆட்டோவில் இந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்தார். யாருடைய குழந்தை என கேட்டதற்கு தனக்கு குழந்தை இல்லாததால் வளர்த்துக் கொள்ள திருப்பதி பஸ் நிலையத்தில் இருந்து எடுத்து வந்ததாக கூறினார். பின்னர், போலீசார் திருப்பதி எஸ்பிக்கு தகவல் தெரிவித்து குழந்தையை திருப்பதிக்கு கொண்டு வந்தனர். பின்னர் எஸ்பி பரமேஸ்வர் முன்னிலையில் பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடத்திச்சென்ற அவிலாலா சுதாகரை கைது செய்தனர். இவர் இதற்கு முன்பு குழந்ைதகளை கடத்தி சென்றுள்ளாரா? இந்த கடத்தலுக்கு பின்னணியில் யாராவது உள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பதி பஸ் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட சென்னை குழந்தை 8 மணி நேரத்தில் மீட்பு: திருப்பதி போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: