மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்ததை நிராகரிக்க கூடாது: மாணவர் சேர்க்கை குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக, கால்நடை மருத்துவ படிக்க விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடப்பு 2024-25ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த விளக்க குறிப்பேட்டில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை எனக் கூறி, நிவேதா என்ற மூன்றாம் பாலித்தனவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், கால்நடை மருத்துவ படிப்புக்கான விளக்க குறிப்பேட்டை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு பிரிவில் மாணவர் சேர்க்கை வழங்க உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், கால்நடை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை கோரி சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட்டால் போதுமானது எனக் கோரப்பட்டது.

இதற்கு மாணவர் சேர்க்கை குழு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை இரு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என மாணவர் சேர்க்கை குழுவுக்கு உத்தரவிட்டார். மேலும், மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என மாணவர் சேர்க்கை குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

The post மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்ததை நிராகரிக்க கூடாது: மாணவர் சேர்க்கை குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: