* ஐந்தாவது கூட தான் போவேன்னு அடம்
* ‘மிஸ்சிங்’ கேசை முடிக்க போலீஸ் முடிவு
சேலம்: நடிகர் வடிவேல் காமெடி என்றாலே, எல்லோருக்கும் ஒரு குதூகலம் வந்துவிடும். அதிலும் மருதமலை படத்தில் வரும் ஏட்டு ஏகாம்பரமும், போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் 5 புருஷன் காமெடியும் பட்டய கிளப்பும்.. அந்த காமெடியில், லவ் ஜோடியாக வரும் இருவரும் தங்களுக்கு கல்யாணம் செய்து வைக்க ஏட்டு ஏகாம்பரத்திடம் கேட்பார்கள். அடுத்தடுத்து வரும் மூவர், நான் 3வது, நான் 2வது, நான் ஒன்னாவதுனு சொல்வாங்க. கடைசியில பெயரை எழுதிபோட்டு சீட்டை எடுக்க சொல்லும் முடிவுக்கு ஏட்டு ஏகாம்பரம் வருவார். அதில் பன்னி பண்டாரம், பூனை மணி, சாரப்பாம்பு, மாட்டு ரவியின்னு பெயரை எழுதி போட, ஏட்டு பெயரையும் சேர்க்க சொல்லுவார் அந்த பெண். கடும் கண்டிப்போடு ஒன்னாவது புருஷனோடு ஏட்டு அனுப்பி வைக்க, அரிவாளோடு வரும் ஒரிஜினல் புருஷன், கடைசியில் அப்பெண்ணை அழைத்து செல்வதோடு காமெடி முடியும்.
அதுபோல ஒரு சம்பவம் சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் நடந்திருக்கு… சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 1ம் தேதி, கடலூரை சேர்ந்த ஒரு வாலிபர் புகார் கொடுத்தார். அதில், கடந்த 28ம் தேதி கேரளா மாநிலம் பாலக்காடு போவதற்காக சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு மனைவியோடு வந்திருந்தேன். பாத்ரூம் செல்வதாக கூறி சென்ற எனது மனைவியை காணவில்லை. அவர், எனது அம்மாவின் 20 பவுன் நகை, ₹15 ஆயிரம் பணத்தோடு மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும்’ என்று கூறியிருந்தார். புகாரை விசாரித்த போலீசார், இளம்பெண் மாயம் என வழக்குப்பதிவு செய்து, அப்பெண்ணை தேடினர். போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அப்பெண் மதுரையில் ஒரு கட்டிட தொழிலாளியோடு குடும்பம் நடத்தி கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படையை மதுரைக்கு அனுப்பி அந்த இளம்பெண்ணை மீட்டு வந்தனர்.
பிறகு ஸ்டேஷனில் நடந்த விசாரணையில் தான், போலீசாரை அந்த இளம்பெண் கதி கலங்க வைத்து விட்டார். 26 வயது கொண்ட அந்த இளம்பெண்ணிடம், உன் கணவனை விட்டு ஏன் ஓடினாய்? என கேட்டு போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த பெண், என்னை காணவில்லை என புகார் கொடுத்தவரு எனக்கு கணவனே இல்லை, அவன் என்னோட நாலாவது என கூறியிருக்கிறார். ஒரு வருஷமாக அவனுக்கு அடைக்கலம் கொடுத்து கூட வச்சிருந்தேன், அவ்வளவு தான் என கூறியிருக்கிறார். தொடர் விசாரணையில் போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர். அதுபற்றி போலீசார் கூறியதாவது: ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்த அந்த இளம்பெண்ணுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரை விட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துள்ளார். 3 குழந்தைகளும் கணவரிடம் வளர்கின்றனர்.
பிறகு கட்டிட வேலைக்கு சென்ற இடத்தில் வேறு வேறு நபர்களுடன் பழகி வாழ்ந்திருக்கிறார். கடைசியாக பாலக்காட்டில் வேலை பார்த்தபோது, கடலூரை சேர்ந்தவருடன் பழகி அவருடன் ஓராண்டுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்துள்ளார். கடந்த மாதத்தில் சேலம் ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் கட்டுமான பணிக்கு அந்த இருவரும் வேலைக்கு வந்துள்ளனர். அப்போது மதுரையை சேர்ந்த கட்டட தொழிலாளியுடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், சம்பவத்தன்று நலாவதாக வாழ்ந்தவரை அம்போனு ரயில்வே ஸ்டேஷனில் விட்டு விட்டு, மதுரைக்காரரோடு சென்றுள்ளார். அவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழும் நபர் என்பதால், இருவரும் ஒன்றாக அங்கு சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தியிருக்காங்க. மனைவி மாயம், நகை, பணத்துடன் சென்றுவிட்டார் என புகார் கொடுத்ததால், அப்பெண்ணை பிடித்து வந்து விசாரிக்க வேண்டியதாயிற்று.
20 பவுன் நகை, பணம் எதையும் அவர் எடுத்து செல்லவில்லை என தெரியவந்துள்ளது. கடைசியாக அந்த இளம்பெண், தன்னை காணவில்லை என புகார் கொடுத்த நாலாவது ஆளோட செல்ல முடியாதுனு கறாராக கூறிவிட்டார். இனி மதுரைக்காரரோட தான் வாழ்வேன் என்றும் அடம் பிடித்துள்ளார். இதனால், எப்படியாவது இந்த மிஸ்சிங் கேசை முடித்து விட வேண்டும் என அந்த இளம்பெண்ணை சேலத்தில் உள்ள காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். நேற்றிரவு அங்கு தங்கிய இளம்பெண்ணை இன்று சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, இளம்பெண் மாயம் வழக்கை முடிவுக்கு கொண்டு வர போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏட்டு ஏகாம்பரத்தின் வடிவேல் காமெடி போல் நடந்த இச்சம்பவம் சேலம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சேலம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டு ஏகாம்பரம் காமெடி; அவன் எனக்கு கணவனல்ல, நாலாவது… போலீசை கதிகலங்க வைத்த இளம்பெண் appeared first on Dinakaran.