செலுத்திய பணத்தை திரும்ப தராததால் ஏலச்சீட்டு நிறுவனத்தில் தீக்குளித்தவர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

சென்னை: செலுத்திய பணத்தை திரும்ப தராததால் ஏலச்சீட்டு நிறுவனத்தில் தீக்குளித்த எலக்ட்ரீசியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் எம்ஜிஆர் நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டு கட்டி வருகின்றனர். இதற்கிடையே கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுப்பையா (56) என்பவர், செல்வம் நடத்தும் ஏலச்சீட்டு நிறுவனத்தில் ரூ1 லட்சத்திற்கான ஏலச்சீட்டில், மாதம் ரூ3,350 செலுத்தி வந்துள்ளார். இதனிடையே, குடும்ப வறுமை காரணமாக 30 மாதங்கள் கட்ட வேண்டிய சீட்டை 15 மாதங்கள் மட்டுமே சுப்பையா கட்டியுள்ளார். மீதமுள்ள மாதங்கள் தன்னால் ஏலச்சீட்டு கட்ட முடியவில்லை என்றும், இதுவரை செலுத்திய பணத்தை மட்டும் தன்னிடம் கொடுத்துவிடுங்கள் என்றும் கேட்டுள்ளார்.

அதற்கு ஏலச்சீட்டு நடத்தும் அலுவலகத்தில் இருந்தவர்கள் திடீரென பாதியில் பணத்தை கேட்டால் எப்படி தரமுடியும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சுப்பையா, கடந்த 30ம் தேதி இரவு எம்ஜிஆர் நகரில் உள்ள ஏலச்சீட்டு நிறுவனத்திற்கு சென்று தனக்கு சேர வேண்டிய பணத்தை உடனே தரவேண்டும் என்று கூறி யாரும் எதிர்பார்க்காத நிலையில் கையில் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அப்போது அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் காயத்ரி, தீ பிடித்த சுப்பையாவை காப்பாற்ற முயன்றார், அதில் அவர் மீதும் தீ பரவியது. பிறகு பொதுமக்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டனர். உடல் முழுவதும் தீக்காயமடைந்த சுப்பையாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், காயமடைந்த காயத்ரியை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுப்பையா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அதைதொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு ெசய்து, ஏலச்சீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காப்பாற்ற முயன்ற பெண் ஊழியர் காயத்ரி தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகிறார்.

The post செலுத்திய பணத்தை திரும்ப தராததால் ஏலச்சீட்டு நிறுவனத்தில் தீக்குளித்தவர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: