சோதனையும் தீரல… சொல்லி அழவும் யாருமில்ல… குலதெய்வம் கோயிலில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் குலதெய்வமான வனப்பேச்சி அம்மன் கோயில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு வனப்பகுதியில் உள்ளது. ஓபிஎஸ் அரசியலில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு இக்கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். ஓபிஎஸ்சை பொறுத்தவரை பொதுச்செயலாளர் நியமனத்தை எதிர்த்த வழக்கில் தோல்வி, பேரவையில் இருக்கை மாற்றம் என தொடர்ந்து பல அடிகளை சந்தித்து வருகிறார். இதனால் வேறு வழியின்றி யாரை எதிர்த்து தர்ம யுத்தம் தொடங்கினாரோ, அவர்களுடனே (டிடிவி.தினகரன்) கூட்டணி வைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போது, கூட்டணி மற்றும் சீட் ஒதுக்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் நிலையில், ஓபிஎஸ்சை யாருமே கண்டுகொள்ளவில்லை.

‘நானும் ரவுடிதான்’ காமெடி பாணியில், பாஜ கூட்டணியில் தாங்கள் இருப்பதாக ஓபிஎஸ் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், பாஜ தரப்பில் ஓபிஎஸ் தங்கள் கூட்டணியில் இருப்பதாக இதுவரை கூறவில்லை. மேலும், மாநில அரசியலில் பின்னடைவை தொடர்ந்து, தேசிய அரசியலில் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் தேனி அல்லது தென்மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று திட்டவட்டமாக கூறி வந்தார். ஆனால், பாஜவோ அதற்கான வழியை ஏற்படுத்தி தராமல் தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறது.

அதே நேரத்தில் பாஜ தலைமையில் பெரிய கூட்டணி அமையும் என்று பாஜ தலைவர்கள் கூறி வந்தனர். அது கைக் கூடாததால் டெல்லி பாஜ மேலிடம் கடும் அப்செட்டில் உள்ளது. இதனால், கூட்டணியில் எடப்பாடி தலைமையிலான அதிமுகவை இழுக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. பல முயற்சிகள் தோல்வியடைந்ததால், கடைசியாக பிரதமர் மோடியே நேரடியாக பேசி எடப்பாடியின் பதிலுக்காக காத்திருக்கிறார். எடப்பாடிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும் மோடி, ஓபிஎஸ்சுக்கு தரவில்லை. சமீபத்தில் இரண்டு முறை தமிழ்நாட்டுக்கு வந்த மோடி, ஓபிஎஸ் மற்றும் டிடிவியை பார்க்காமல் புறக்கணித்துவிட்டார்.

தொடர் அரசியல் குழப்பங்களால், கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் கடும் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது. என்னதான் எதிர்ப்பு அரசியல் செய்தாலும் சோதனை மட்டும் தீரவில்லை. இதை சொல்லி அழவும் யாரும் இல்லை என்று ஓபிஎஸ் விரக்தியில் உள்ளார். பொதுவாக, குல தெய்வ கோயிலுக்கு சிவராத்திரி அன்றும், குடும்ப விசேஷ நாட்களிலும்தான் பலரும் சென்று வருவார்கள். இன்று சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று முன்தினம் குடும்பத்துடன் ஓபிஎஸ் குலதெய்வமான வனப்பேச்சி அம்மன் கோயிலுக்கு சென்று வந்துள்ளார். மேலும், அங்கு சிறப்பு பூஜைகளும் செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மன விரக்தியின் வெளிப்பாடாகவோ சென்று வந்திருக்கலாமென அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post சோதனையும் தீரல… சொல்லி அழவும் யாருமில்ல… குலதெய்வம் கோயிலில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: