பல்லாவரம் அருகே பழைய டயர் கடையில் பயங்கர தீ விபத்து: புகை மூட்டத்தால் மக்கள் அவதி

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் ரெங்கநாதபுரம் சர்வீஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் காதர் பாஷா. இவர், பழைய டயர்களை வாங்கி பழுது பார்த்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் பின்புறம் உள்ள காலி இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழைய டயர்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு அடுக்கி வைக்கப்பட்டிருந்த டயர்களில் இருந்து திடீரென குபுகுபுவென கரும்புகை வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வாலியில் தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்கடங்காமல் தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அருகில் வசித்துவரும் பொதுமக்களுக்கு புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் மற்றும் கண்ணெரிச்சல் ஏற்பட்டு அவதியுற்றனர்.

இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த பழைய டயர்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் தீ அருகில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டது. இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் சதிச்செயலா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அனகாபுத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post பல்லாவரம் அருகே பழைய டயர் கடையில் பயங்கர தீ விபத்து: புகை மூட்டத்தால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: