தொழில்நுட்ப பணிகள் தேர்வு 652 இடங்களுக்கு 95,925 பேர் போட்டி: தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது

சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது. 652 இடங்களுக்கு 95,925 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) 652 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 26ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 24ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு 95,927 பேர் விண்ணப்பித்தனர்.

இதில் 95 ஆயிரத்து 925 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 49,245 பேர் ஆண்கள், 46,677 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் அடங்குவர். இவர்களுக்கான கொள்குறிவகைத் தேர்வு(கணினி வழித் தேர்வு, ஓஎம்ஆர் முறைத் தேர்வு) மற்றும் விரிந்துரைக்கும் வகைத்தேர்வு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து 15ம் தேதி, 16ம் தேதி, 17ம் தேதி, 18ம் தேதி, 21ம் தேதி, 22ம் தேதி, 23ம் தேதி, 26ம் தேதி ஆகிய நாட்களில் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடவாரியான தேர்வுகள் நடைபெறுகிறது.

14ம் தேதி(இன்று) காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை ஆர்க்கிடெக்சர், கம்யூட்டர் சயின்ஸ் அன்ட் என்ஜினியரிங், ஸ்டடிஸ்டிக் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை பேசிக் ஆப் இன்ஜினீயரிங், மைக்ரோபயாலஜி தேர்வும் நடக்கிறது. இதற்காக 38 மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓஎம்ஆர் முறை தேர்வுகள் 330 தேர்வு அறைகளிலும், கணினி வழித்தேர்வு 161 தேர்வு அறைகளிலும் நடைபெறுகிறது.

ஓஎம்ஆர் முறை தேர்வுகளை கண்காணிக்கும் பணியில் 330 தலைமை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் நடைபெறும் ேதர்வை 13,425 பேர் எழுதுகின்றனர். சென்னையில் ஓஎம்ஆர் முறை தேர்வுகள் 45 தேர்வு இடங்களிலும், கணினி வழித்தேர்வு 10 இடங்களிலும் நடக்கிறது. தேர்வு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post தொழில்நுட்ப பணிகள் தேர்வு 652 இடங்களுக்கு 95,925 பேர் போட்டி: தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது appeared first on Dinakaran.

Related Stories: