உலகிற்கு வழிகாட்டும் அறச்சிந்தனையை தமிழ் அறிஞர்களின் எழுத்துகள்தான் தந்தன: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பெருமிதம்

சென்னை: உலகத்திற்கே வழிகாட்டும் சமூக நீதியை, விருந்தோம்பலை, வீரத்தின் மாண்பை, நட்பின் இலக்கணத்தை தந்த பெருமைக்குரியது தமிழ் அறிஞர்களின் எழுத்துக்கள் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் ‘தமிழால் முடியும்’ என்ற வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி நேற்று சென்னையில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழ்நாட்டின் வருங்கால எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக மிளிர இருக்கும் மாணவ செல்வங்களே, நீங்கள் தவறாமல், அரசியல் விருப்பு வெறுப்பின்றி கலைஞரின் எழுத்துகளை படியுங்கள். ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என பறைசாற்றிக் கொண்ட அந்த மாமனிதரின் எழுத்துகள் உங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும்.

உலக அரங்கில் தனிப்பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்கும் தமிழினம், உலகத்திற்கே வழிகாட்டும் சமூக நீதியை, அறச் சிந்தனையை, விருந்தோம்பலை, வீரத்தின் மாண்பை, நட்பின் இலக்கணத்தை, வாழ்வின் நெறியினை தந்த பெருமைக்குரியது. அத்தகு தமிழினத்தின் பெயரையும் சேர்த்து, இத்திட்டத்தின் பெயரினை இனி வரும் காலங்களில், ‘தமிழால் முடியும்! தமிழரால் முடியும்!’ என குறிப்பிடலாம். இவ்வாறு அவர் கூறினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன் தொடக்கவுரை நிகழ்த்தினார். உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோபிநாத் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அவ்வை அருள் வரவேற்றார். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநர் பவானி நன்றி கூறினார்.

The post உலகிற்கு வழிகாட்டும் அறச்சிந்தனையை தமிழ் அறிஞர்களின் எழுத்துகள்தான் தந்தன: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: