தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து இணையதளத்தில் பதிவேற்ற ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை வடக்கு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 5.90 ஏக்கர் நிலத்தை பாண்டியன் ஹோட்டல் நிர்வாகம் 1968ல் குத்தகைக்கு எடுத்தது. குத்தகை காலம் 25 ஆண்டுகளை தாண்டி, கூடுதலாக 15 ஆண்டுகள் முறையான வாடகை செலுத்தாமல் 2008 வரை அனுபவித்து வந்துள்ளது. இதனிடையே வாடகையை மறுசீரமைத்து 36 கோடியே 58 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என பாண்டியன் ஹோட்டல் நிர்வாகத்துக்கு மதுரை வடக்கு வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொகையை செலுத்தாவிட்டால் நிலம் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என 2015-ல் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து ஹோட்டல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், 1968ல் 25 ஆண்டு கால குத்தகையில் பெற்றுவிட்டு, 300 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை கூடுதலாக 15 ஆண்டுகள் வாடகை செலுத்தாமல் அனுமதியின்றி ஹோட்டல் நடத்தி பயனடைந்துள்ளனர்.

அதிக லாபம் ஈட்டியுள்ள நிலையில், தற்போது நிலத்தின் வாடகையை செலுத்துவதற்கு மறுப்பதை ஏற்க முடியாது என்று கூறி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தார். அதேசமயம் தமிழகத்தில் உள்ள அரசு குத்தகை நிலம் தொடர்பான விவரங்களை முழுமையாக அளவீடு செய்ய வேண்டும் என்றும் குத்தகை விவரங்களை ஒரு மாதத்தில் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். குறிப்பாக வழக்கு தொடர்ந்த பாண்டியன் ஹோட்டல் நிர்வாகத்திடம் இருந்து நிலத்தை மீட்டு வாடகையை வசூலிக்கவும் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து இணையதளத்தில் பதிவேற்ற ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: