நாட்டின் வளம், கலாச்சார மரபின் பிரதிபலிப்பு தான் தமிழ்நாடு: விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

சென்னை: பாரத நாட்டின் வளம், கலாச்சார மரபின் பிரதிபலிப்புதான் தமிழ்நாடு என்று திருச்சி விமான நிலைய புதிய முனை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை நேற்று திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: முதற்கண் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டுக்கான என்னுடைய முதலாவது பொது நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடக்கிறது என்பதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். இன்று தொடங்கப்பட்ட இருபதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பலப்படுத்தும்.

இதனால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். தமிழ்நாட்டில் 2023ம் ஆண்டின் கடந்த சில வாரங்கள் மிகவும் கடினமானவையாக இருந்தன. கனமழை காரணமாக நமது சக குடிமக்களை இழக்க வேண்டியிருந்தது. அதில் சொத்துக்கள், உடமைகள் இழப்பும் கணிசமானவையாக இருந்தன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை எனக்குள்ளே மிகவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நெருக்கடியான வேலையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு துணையாக நிற்கின்றது. சில நாட்களுக்கு முன்பு இறந்த விஜயகாந்த் சினிமாவுலகின் கேப்டன் மட்டுமல்ல, அரசியலிலும் அவர் கேப்டனாக இருந்து வந்திருக்கிறார். அவருடைய குடும்பத்துக்கும், அபிமானிகளுக்கும் என் ஆழமான இரங்கலை உரித்தாக்குகிறேன்.

பாரத நாட்டின் வளம் மற்றும் கலாச்சார மரபின் பிரதிபலிப்பு தான் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் வசம் தமிழ்மொழி மற்றும் ஞானம் என்ற பழமையான கருவூலம் இருக்கிறது. புனிதர் திருவள்ளுவர் தொடங்கி, சுப்பிரமணிய பாரதி வரை பலர் அற்புதமான இலக்கியங்களை படைத்துள்ளனர். சி.வி. ராமன் தொடங்கி இன்று வரை அற்புதமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சொந்தக்காரர்கள் பலரை இந்த மண் உருவாக்கி அளித்துள்ளது. நான் எப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வருகிறோனோ அப்போதெல்லாம் ஒரு புதிய சக்தியை நிரப்பி கொண்டு செல்கிறேன்.

டெல்லியின் பாராளுமன்ற புதிய கட்டிடத்திலேயே புனிதமான செங்கோல் நிறுவப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். தமிழ் பாரம்பரியமானது. தேசத்துக்கு அளித்து இருக்கும் நல்லாளுகை மாதிரியிலிருந்து கருத்தூக்கம் பெரும் முயற்சியே இது. இன்று பாரதம் கட்டுமானம் மற்றும் சமூக கட்டமைப்பின் மீது இதுவரை காணாத முதலீடுகளை செய்துவருகிறது. இன்று பாரதம் உலகின் தலைசிறந்த ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலகின் ஒரு புதிய நம்பிக்கை தாரகையாக இன்று பாரதம் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. பெரிய பெரிய முதலீட்டாளர்கள் எல்லாம் இன்று பாரதத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.

இதன் நேரடி ஆதாயம் தமிழ்நாட்டிற்கும், தமிழ்மக்களுக்கும் கிடைத்து வருகிறது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் காரணமாக இந்த இடத்தின் இணைப்புத்திறன் மூன்று மடங்கு அதிகரிக்கும். இங்கிருந்து கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா மேலும் உள்நாட்டின் உலக நாடுகளின் பிற பாகங்கள் வரை திருச்சியின் இணைப்பில் அதன் திறன் மேலும் வலுவானதாக ஆகும். இங்கே கல்வி, உடல்நலம் மற்றும் சுற்றுலாத்துறைகளில் மிகப்பெரிய அளவுக்கு பலம் கூட்டப்படும்.

விமான நிலையத்தின் திறன் அதிகரிப்பதோடு, இதை உயர்த்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும் உயர்த்தப்பட்ட சாலையாகவும் கூட மிகப்பெரிய வசதி உண்டாகும். திருச்சி விமான நிலையம் உள்ளூர் கலை, கலாசாரம் வாயிலாக தமிழ் பாரம்பரியம் பற்றிய பெருமைமிகு விஷயங்களை உலகிற்கு பறை சாட்டும் என்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. தமிழ்நாடு உட்பட தேசத்தின் பல்வேறு துறைமுகங்கள் நல்ல சாலைகளோடு இணைக்கப்பட்டு வருகின்றன.

ஒன்றிய அரசின் பெரும் முயற்சிகளால் இன்று பாரதத்தின் துறைமுக திறனிலும் கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்து திரும்பி செல்லும் நேர அளவிலும் பெரிய மேம்பாடு ஏற்பட்டிருக்கிறது. காமராஜர் துறைமுகம் கூட இந்த தேசத்தின் மிக விரைவாக மேம்பாடு அடைந்து வரும் துறைமுகங்களில் ஒன்றாக விளங்குகிறது. மாநிலத்தில் வரலாறு காணாத நிதியை செலவு செய்து வருகிறது. 2014 க்கு முன்பான 10 ஆண்டுகளில் மத்திய அரசு, அதன் தரப்பில் இருந்து மாநிலங்களுக்கு சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. நம்முடைய அரசாங்கமானது கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு 120 லட்சம் கோடி ரூபாயை அளித்திருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

The post நாட்டின் வளம், கலாச்சார மரபின் பிரதிபலிப்பு தான் தமிழ்நாடு: விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: