ஏ பிரிவில் இந்தியா, கனடா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்து, சி பிரிவில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், பப்புவா நியூகினியா, உகான்டா, டி பிரிவில் வங்கதேசம், நெதர்லாந்து, நேபாளம், இலங்கை, தென்ஆப்ரிக்கா இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றில் 4 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். லீக் சுற்றில் மொத்தம் 40 போட்டிகள் நடக்கிறது.
சூப்பர் 8 சுற்றில், ஏ மற்றும் சி பிரிவில் முதலிடம், பி மற்றும் டி பிரிவில் 2ம் இடம் பிடிக்கும் அணிகளும், குரூப் 2 பிரிவில் ஏ மற்றும் பி பிரிவில் 2வது இடம், பி மற்றும் டி பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிகள் இடம்பெறும். இதில் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். லீக், சூப்பர் 8, அரையிறுதி, பைனல் என மொத்தம் 27 நாட்களில் 55 போட்டிகள் நடைபெற உள்ளது.
அரையிறுதி போட்டிகள் ஜூன் 27ம் தேதியும், இறுதி போட்டி 29ம் தேதி பிரிட்ஜ்டவுன் மைதானத்திலும் நடைபெற உள்ளது. முதல் நாளான நாளை 2 போட்டி நடக்கிறது. இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு டல்லாஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் கத்துக்குட்டி அமெரிக்கா-கனடா அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து நாளை இரவு 8 மணிக்கு வெஸ்ட்இண்டீசின் பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2வது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ், பப்புவா நியூகினியா அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. மேலும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இலவசமாக பார்க்கலாம்.
சாதிக்குமா இந்தியா?
இந்த தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. 2007ம் ஆண்டு முதல் டி.20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா அதன் பின்னர் 2014ம் ஆண்டு பைனலில் இலங்கையிடம் தோல்வி அடைந்து 2வது இடத்தை பிடித்தது. கடந்த உலக கோப்பையில் அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்த நிலையில் இந்த முறை பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்துடன் வரும் 5ம் தேதி மோத உள்ளது. பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக வரும் 9ம் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது.
தொடர்ந்து 12ம்தேதி அமெரிக்கா மற்றும் கடைசி லீக் போட்டியில் 15ம் தேதி கனடாவுடன் மோத உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் நியூயார்க்கில் நடக்கிறது. 2013ம் ஆண்டு சாம்பியன் டிராபிக்கு பின்னர் இந்தியா இதுவரை எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. இதனால் 11 ஆண்டுக்கு பின் ஐசிசி தொடரில் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரோகித்சர்மா, விராட் கோஹ்லி, ஜடேஜா உள்ளிட்ட வீரர்களுக்கு இதுவே கடைசி டி.20 உலககோப்பை தொடராக இருக்கும்.
The post 20 அணிகள் பங்கேற்கும் டி.20 உலக கோப்பை தொடர் நாளை தொடக்கம்: 27 நாட்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து appeared first on Dinakaran.